தனுஷ் கட்சி ஆரம்பிப்பது கன்பாஃர்ம்.. தவெகவுக்குத் தான் சேதாராமே! அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: தனுஷ் பாஜகவில் இணைகிறாரா? இல்லையா என்பது தெரியாது. ஆனால் உறுதியாக கட்சி ஆரம்பிக்கிறார். தனுஷ் கட்சி துவங்கும் தகவல்கள் அவரது நண்பர்கள் மூலமாக தமக்கு தெரிய வந்துள்ளது எனவும், நடிகர் தனுஷின் வருகை தவெக அரசிற்கு சிக்கலும் சிரமமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்ற மருது சகோதரர்கள் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," தவெக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல், விளம்பரம் செய்வதிலும், ரீல்ஸ் எடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை செய்வது போன்ற பணிகளில் முதல்வர் ஈடுபடுவதில்லை.
ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டதற்கு அடையாளமாகத்தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறுமிகள் காணாமல் போவதும், கொலைகள் நடப்பதும், கைதிகள் ஒட்டுமொத்தமாக தப்பி ஓடுவதும் தவெக அரசின் இயலாமையை காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியாது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை இந்த அளவிற்கு வேகமாக கைது நடவடிக்கை எடுப்பது என்பது தேவையில்லாதது.
அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ் கைதில் உள்நோக்கம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. இன்னும் பல பைல்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இன்றைக்கு இவர்கள் பைல்களை ஓபன் செய்யலாம், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் இவர்களது பல பைல்களை ஓபன் செய்வார்கள். பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் நியாயமான நடவடிக்கை எடுத்தால் பாராட்டத்தக்கது. பழிவாங்கும் எண்ணத்தோடு அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டையோ, பாஜகவையோ அழித்து விடலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
திராவிட கட்சிகள்
திராவிட இயக்கங்கள் எல்லாம் பழம்பெரும் கட்சிகள், பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சமுதாயத்திற்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் போராடிய கட்சிகள். திராவிட இயக்க வரலாற்றில்தான் தமிழகம் முன்னணி மாநிலமாக இந்திய அளவில் உயர்ந்திருக்கிறது.
தவெக ஆட்சி
தமிழகத்தில் இன்றைக்கு சாலைகளும், பாலங்களும் பள்ளிக்கூடம் இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே காரணம், ஆகவே இதை தவிடு பிடியாக்க தவெக அரசு நினைத்தால் அது நடக்காது. இன்றைய அரசியல்வாதிகள், அமைச்சர்களை பற்றியெல்லாம் தமிழக மக்களும், அரசியல் வல்லுனர்களும், பத்திரிகையாளர்களும் கவனத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், யார் தவறு செய்தாலும் அதற்கான விலையை அனுபவித்துதான் தீர வேண்டும், தவெக ஆட்சியில் உள்ளவர்களும் விதிவிலக்கல்ல.
ஆட்சியை கவிழ்க்க சதி?
இன்றைக்கு அதிகாரம் இருப்பது என்பதற்காக கண்ணை மறைத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பது, பழிவாங்குவது, பிற கட்சிகளை அழிக்க நினைத்தால் அது ஒருக்காலமும் நடக்காது. .அந்த எதிர்வினை அவர்களையே சுடும். தவெக ஆட்சியை கவிழ்க்க எந்த சதியும் நடக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே பயமும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பயமில்லாமல் ஆட்சி நடத்தும் அளவிற்கு தவெவிற்கு தனி பெரும்பான்மை இல்லை.
தனுஷ்
தனுஷ் பாஜகவில் இணைகிறாரா? இல்லையா என்பது தெரியாது. ஆனால் உறுதியாக கட்சி ஆரம்பிக்கிறார்.
தனுஷ் கட்சி துவங்கும் தகவல்கள் அவரது நண்பர்கள் மூலமாக தமக்கு தெரிய வந்துள்ளது. தனுஷை பாஜக 2ஆம் டீம் என்கிறார். அப்படியென்றால் பாஜகவின் முதல் டீம் தவெக- வா? "டி" டீம் தனுஷ் என்றால் முதல் டீம் தவெகவா? நடிகர் விஜய் முதல்வர் விஜய்க்கு போட்டியாக இருப்பாரோ இல்லையோ, போட்டியாக பேசப்படுகிறார்.
அதிமுக - திமுக
நடிகர் தனுஷுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும், அவருக்கான சினிமா மவுசு இருக்கிறது. அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 35 வயதுக்குள் உள்ளவர்கள் வாக்குகளை பிரிக்கின்ற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் நடிகர் தனுஷின் வருகை தவெக அரசிற்கு சிக்கலும் சிரமமும் ஏற்பட்டுள்ளது. தனுஷைக் கண்டு தவெக பயந்துள்ளதால் தான் அவரைப்பற்றி பேசுகிறார்கள். பயமில்லை என்றால் அவரைப் பற்றி பேசாமல் விட்டு விட வேண்டியது தானே. அரசியலில் தனுஷ் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் களத்தில் அதிமுகவும், திமுகவும் மட்டுமே" என்றார்.




Click it and Unblock the Notifications
