அன்று கலைஞருக்கு கவிதை பாடியவர்.. இன்று விஜய்க்கு தொகுப்பாளினி.. யார் இவர்?
விருதுநகர்: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் தொகுப்பாளினியாக இருந்த துர்கா தேவி தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்திருக்கிறார்.
கடந்த வாரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் அதிகம் பேரை இவர் யார்? என்று கேள்வி எழுப்ப வைத்தவர் தொகுப்பாளினி துர்காதேவி. விஜய் ரசிகர்கள் இவர் பேசப் பேச உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அதற்கு ஏற்ப சவுண்ட் விட்டு சிங்கம், புலி என விஜய்யைப் புகழ்ந்து தள்ளினார். அனுபவம் மிக்க பார்வையாளர்கள் யார் இந்தப் பெண்? ஏன் இப்படி கத்துகிறார் எனக் கொஞ்சம் டென்ஷன் ஆகினர்.

துர்கா தேவிக்கு இது முதல் மேடை அல்ல. தவெக தொடங்கியது முதல் பல மேடைகளில் விஜய்யைப் புகழ்ந்தும் பல கூட்டங்களைத் தொகுத்தும் வழங்கி வருகிறார் துர்கா. இவருக்கு இளம் வயது இருந்தே கவிதை என்றால் கொள்ளைப் பிரியம். அந்தக் கவிதை ஆர்வத்தால் கவிபாரதி துர்கா என்று பாராட்டும் பெற்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் கணவர் மற்றும் குழந்தையுடன் மதுரையில் வசித்து வருகிறார். பொறியியலில் எம்.இ பட்டம் பெற்றுள்ள இவர் சென்னையில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். ஆனால் அவரது ஆர்வம் ஊடகத்துறை மீது இருந்தது. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகப் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். எவ்வளவோ முட்டி மோதி பார்த்தும் எங்கும் அவருக்கு கதவுகள் திறக்கப்படவில்லை.
அதன்பின்னர் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அவர் பணிக்குச் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இளம் வயது முதலே எழுத்து, கவிதை என இயங்கிவந்த துர்கா, பல மேடைகளில் ஏறி தன் கவிதை ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் அதாவது 2021இல் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் பரிசு 10 ஆயிரம் பெற்றுள்ளார். அடுத்ததாக மாநில அளவில் நடந்த போட்டியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கையால் முதல் பரிசையும் பெற்றுள்ளார். கல்லூரி படித்த காலத்தில் கலைஞர் 90 என்ற தொகுப்பு நூலில் பாலங்கள் போற்றும் பைந்தமிழ் என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையும் இடம்பெற்றுள்ளது. இப்படி தொடர்ந்து கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வந்த துர்காதேவிக்கு கவிபாரதி பட்டம் கிடைத்துள்ளது. அதன்பின்னர் கவிபாரதி துர்கா என அடையாளம் மாறி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவரது சகோதரர் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து தவெகவில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். இளம் வயது முதலே விஜய் ரசிகராக இருந்த துர்கா, தனது கைச்செலவுக்கு வழங்கப்படும் பணத்தைச் சேமித்து விஜய் நற்பணி மன்றத்தின் வழியாக அவரது பிறந்தநாளுக்கு உதவிகளைச் செய்துவந்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு விருதுநகர் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவெக கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வந்துள்ளார். அவரது பேச்சைக் கேட்ட புஸ்ஸி ஆனந்த் மாநாட்டில் இவரைத் தொகுப்பாளினியாக ஆக்க விஜய்யிடம் அனுமதி பெற்றுள்ளார். அவருக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளனர்.
திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு விருது நகரில் நடத்திய சமுதாய வளையல் காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணியாக இருந்த இவர் கவிதை பாடியுள்ளார். அந்தக் கவிதை ஆட்சியருக்குப் பிடித்துப் போக அதை அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் அப்போது பகிர்ந்திருந்தார்.

இப்படி படிப்படியாகப் பல மேடைகளில் ஏறி தன் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டிய துர்காவுக்கு, மிகப்பெரிய வாய்ப்பாக தவெக மாநாட்டைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை விஜய் அளித்துள்ளார். அதற்காக விஜய்க்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். தனியாக ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தவெக மாநாட்டில்தான் முதன்முதலாக விஜய்யை துர்கா பார்த்திருக்கிறார். அதனால் கொஞ்சம் பரவசம் அதிகமாகியுள்ளது. உணர்ச்சி பொங்கப் பேசியும் இருக்கிறார். தன் மீது விழும் விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை எனச் சொல்லும் துர்கா, தன் நிறமும் குரலில்தான் விமர்சனத்திற்கான காரணம். மிகப்பெரிய பிரபலங்களை நினைத்திருந்தால் விஜய் மேடையேற்றி வாய்ப்பு வழங்கி இருக்க முடியும். ஆனால், என்னைப் போன்ற சாதாரண தொண்டனுக்கு அவர் அளித்த வாய்ப்பு சாதாரணமானதல்ல என்றும் அவர் மனம் நெகிழ பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications