நான் என்ன உன் வேலைக்காரனா.. முடிஞ்சதை பாத்துக்கோ! மாற்றுத்திறனாளியிடம் சீறிய மதிமுக எம்எல்ஏ ரகுராமன்
விருதுநகர்: அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளியிடம் சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் அளித்துள்ள பதில் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாகத் தமிழக அரசு மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவி திட்டங்களை அறிவித்து உள்ளன.
இதற்கிடையே அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளியிடம் சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாயல்பட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் திருமலை குமார். 60% வரை மாற்றுத்திறனாளி ஆன இவர் அதே பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பாண்டீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

மூன்று சக்கர வாகனம்
ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் இவர் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளதால் அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்திற்காக விண்ணப்பித்துள்ளார். இவர் பல முறை விண்ணப்பித்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த மாதம் தாயல்கட்டி பகுதிக்கு வந்த சாத்தூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஆடியோ
அந்த மாற்றுத்திறனாளி நபர் மனு கொடுத்து சுமார் ஒரு மாதம் ஆகிவிட்ட சூழலில், அவருக்கு இன்னும் வாகனம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாற்றுத்திறனாளி மதிமுக எம்எல்ஏ ரகுமானிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இது குறித்துக் கேட்டுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளியிடம் ஆணவத்துடன் பதில் அளித்துள்ளார் ரகுராமன். இது தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடுகடுத்த எம்எல்ஏ
எம்எல்ஏவை மாற்றுத்திறனாளி தொடர்பு கொண்ட போது, "அவசரப்படாமல் இருங்கள்.. எந்த வேலையும் உடனே எல்லாம் நடக்காது.. நான் ஒன்றும் உங்கள் வீட்டு வேலைக்காரன் கிடையாது.. வேணும்னா இந்த வேலையை வேறு ஒருவரிடம் கொடுத்துச் செய்து கொள்ளுங்கள். எந்த அதிகாரியும் உடனே செய்து தர மாட்டார்கள். வேண்டும் என்றால் உங்கள் மனுவைத் தனியாக எடுத்து வைத்து விடுகிறேன். நீங்களே பாரத்துக்கோங்க" என்று கோபமாகப் பேசுகிறார்.

வேதனை
இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாற்றுத்திறனாளி திருமலை குமார் கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களிடம் கையேந்தக் கூடாது என்பதற்காகவே அரசு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளன. நான் 3 சக்கர வாகனம் பெற விண்ணப்பித்தேன். இதன் மூலம் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மேம்படும். எம்எல்ஏவிடம் இது குறித்து மனு அளித்து இருந்தேன். இது குறித்துக் கேட்ட போது சட்டமன்ற உறுப்பினரின் இத்தகைய பேச்சு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

விளக்கம்
இந்தச் சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாத்தூர் மதிமுக எம்எல்ஏ ரகுராம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். "எனது செல்போன் எண் தொகுதியில் இருக்கும் அனைவரிடமும் உள்ளது. அரசுத் திட்டத்தின்படி 70% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும். மனு கொடுத்தவர் 60% மாற்றுத்திறனாளி தான் என்றாலும் நான் அவருக்கு 3 சக்கர வாகனம் கொடுக்க வலியுறுத்தி உள்ளேன். விரைவில் அவருக்கு வாகனம் கொடுப்போம். ஆனால், அதற்குள் அடிக்கடி மொபைலில் அழைத்து தொந்தரவு செய்து வந்தார்" என்றார்.












Click it and Unblock the Notifications