என்டிஏ தலைமை: ”நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்னு புலம்புகிறார் எடப்பாடி..” ஸ்டாலின் விமர்சனம்
விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி இப்போது முழுசாக என்.டி.ஏ பழனிசாமியாக மாறியிருக்கிறார். நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்.. என்று சொல்கிற மாதிரி மைக் முன்னாடி வந்து நின்னு, நான் தான் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை.. நான் தான் என்.டிஏ கூட்டணிக்கு தலைமை என்று.. புலம்பி கொண்டிருப்பதாக விருதுநகர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
இதேபோன்று மத்திய அரசு நமக்கு பட்ஜெட்டில் ஜீரோ கொடுத்ததை போல, நாமும் வரும் தேர்தலுக்கு அவர்களுக்கு ஜீரோ கொடுப்போம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கல்வி நிதியை கொடுங்க..
விருதுநகர் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி மாநாடு இன்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் ரேம்ப் வாக் செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய கல்வி நிதியை கொடுங்க.. மெட்ரோ நிதியை கொடுங்க.. பேரிடர் நிவாரண நிதியை கொடுங்க.. புதிய ரயில் திட்டங்களை கொடுங்க.. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கொடுங்க..
நாமளும் ஜீரோ கொடுப்போம்
வரி வருவாயை 50 சதவீதமாக கொடுங்க.. நீட்டில் இருந்து விலக்கு கொடுங்க.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுங்க.. கீழடி அறிக்கையை கொடுங்க.. இதையெல்லாம் தான் நாங்க கேட்கிறோம். ஆனால் நமக்கு அவங்க கொடுப்பது என்ன "ஜீரோ.." அப்போ நாமளும் தேர்தலுக்கு "பூஜ்ஜியம்" தானே கொடுக்கனும்.
பாஜக மட்டுமல்லாமல் என்.டி.ஏ கூட்டணியே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் ஜீரோ கொடுக்கனும்.. தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே கொடுக்காமல் ஜீரோ கொடுத்த ஒன்றிய அரசை எதிர்க்காமல் பாஜகவினுடைய கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடிக்கு தெரியுமா? தெரியாதா?
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இப்போது முழுசாக என்.டி.ஏ பழனிசாமியாக மாறியிருக்கிறார். நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்.. என்று சொல்கிற மாதிரி மைக் முன்னாடி வந்து நின்னு நான் தான் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை.. நான் தான் என்.டிஏ கூட்டணிக்கு தலைமை என்று.. புலம்பி கொண்டிருக்கிறார்.
மத்திய அரசு இப்போது கொண்டு வருகின்ற 150 நாள் வேலை திட்டத்தை நாம எதிர்க்கிறோமாம்.. எடப்பாடி சொல்லிக்கொண்டே போகிறார்.. அத பத்தி அவருக்கு எதாவது தெரியுமா.. 100 நாள் வேலைத் திட்டம் அமலில் இருந்த போது பாஜக அரசு 50 நாட்கள் கூட வேலை தரவில்லை. இப்போது எப்படி 125 நாட்கள் கொடுப்பாங்க.. இதில் என்னவென்றால், மாநில அரசு தான் 45 சதவீத நிதியை கொடுக்க வேண்டுமாம்.. இது எல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா தெரியாதா?
ஓனரை மிஞ்சிய லேபராக பழனிசாமி
என்ன சட்டம், என்ன திருத்தம் என்று எதுவும் தெரியாமல் எடப்பாடி பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரு படி மேலே போய் 150 நாட்கள் என்றும் பேசி வருகிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி.. அவங்க கூட்டணியில் இருக்கிறவங்களேயே பாருங்களேன்..
முதலில் சசிகலாவை முதல்வர் ஆக்க நினைச்சாங்க.. அதற்கு பிறகு கூவத்தூரில் எடப்பாடிய தேர்ந்தெடுத்தாங்க.. பிறகு முதல்வர் ஆக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு தூக்குனாங்க.. தனக்கு பதவி கொடுத்தவரையே கட்சிய விட்டு நீக்கினார் பழனிசாமி.. போன வருஷம் எல்லாரும் தனித்தனியாக நின்னு தேர்தலை சந்தித்தார்கள்.
இதுவரை பெற்ற தோல்வியை விட
இப்போ அவர்கள் எல்லாம் மீண்டும் பாஜக கூட இணைந்து விட்டார்கள். மக்கள் நலனுக்காக இவங்க கூட்டணி வைக்கல.. இவர்களுக்குள் மியூசிக்கல் சேர் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடக்க போகிற தேர்தல் தமிழ்நாடு மற்றும் என்.டி.ஏவோடு.. இதில நாம தான் தமிழ்நாட்டை ஜெயிக்க வைக்க வேண்டும். அவங்க தோற்க தான் போகிறார்கள். ஆனால் இதுவரை பெற்ற தோல்வியை விட படுதோல்வியை நாம அவங்களுக்கு கொடுக்கனும்.
அதே சமயம் இதுவரை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றிய நாம் பெற வேண்டும். இதற்கு நாம் எல்லாரும் தான் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் மூத்த பிள்ளை இளைஞர் அணி.. எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள். உழைங்க.. வெல்வோம் ஒன்றாக... இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications