அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் போது பவர் கட்.. சஸ்பெண்ட் ஆன EB அதிகாரி யார் தெரியுமா.. தங்கம் ஆவேசம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதற்காக, மின் வாரிய இளநிலைப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் தி.மு.கழகத்தின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்த அண்ணாத்துரை ஆவார். இவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவெக அரசு பணியிடை நீக்கம் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் அரசு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் விருதுநகர் மின்வாரிய இளநிலைப் பொறியாளர் அண்ணாதுரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு திமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாதுரை பணியிடை நீக்கம்
தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின் பொறியாளர் அ.அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நிர்வாக பிரச்சனை
ஒரு அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார். தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'மின்வெட்டா' என்பதையெல்லாம் முறையாக விசாரித்து. உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.
திமுக சங்க நிர்வாகி
குறிப்பாக, அண்ணாதுரை அவர்கள் தி.மு.கழகத்தின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு அரசு ஊழியரின் பணித்திறன் மற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்தத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.
திசை திருப்பும் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல், அவற்றைத் திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது
தங்கம் தென்னரசு கோரிக்கை
எனவே, இளமின் பொறியாளர் அ. அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
