ராஜேந்திர பாலாஜிக்கு தூது.. ஆதரவாளர்கள் கொடுத்த அட்வைஸ்.. அறிவாலயம் பக்கம் நகர்கிறாரா?
விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக பக்கம் ஒதுங்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர், எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் நகர்ந்துவிட்டால், எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய தளபதியாக மாறிவிடலாம்.. அதனால் அவசரம் தேவையில்லை என்றும் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெக நோக்கி செல்ல தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே 8 முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் நகர்ந்துவிட்ட சூழலில், அடிமட்ட அளவில் அதிமுகவின் அமைப்பையும் தவெக கைப்பற்ற தொடங்கி இருக்கிறது. களம் தவெகவுக்கு சாதகமாக மாறி வருவதை அறிந்து கொள்ளும் உள்ளூர் நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே தவெக பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாகவே சீனியர்கள் பலரும் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு பின் அடுத்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆர்பி உதயகுமார் தவெகவை கடுமையாக சாடி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய தளபதிகளாக இருந்த எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவருமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனர்.
தென் மாவட்டங்களில் ராஜேந்திர பாலாஜி மட்டுமே அதிமுக கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. கடந்த முறையே கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை காரணமாக சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு பின் அடுத்த அடையாளத்தை உருவாகக் திமுக ஆலோசித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் திமுக மறுசீரமைப்பில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் இருந்து ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதனால் ராஜேந்திர பாலாஜியும் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அப்போது ராஜேந்திர பாலாஜி அவசரம் காட்ட வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி இருக்கின்றனர். எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் கட்சியில் இருந்து விலகினால், அதிமுகவில் முக்கிய இடத்தை அடைய முடியும் என்று கூறி இருக்கின்றனர். அதேபோல் ராஜேந்திர பாலாஜியும் எந்த அவசரமும் இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் முடிவு எடுக்கலாம் என்று அமைதியாகி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
