எடப்பாடி பழனிசாமி கூட பிரதமராக வாய்ப்பிருக்கு! இவர் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!
விருதுநகர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமி கூட பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய போது இதனை அவர் கூறினார். ராஜேந்திரபாலாஜியின் இத்தகைய பேச்சை எடப்பாடி பழனிசாமியே ரசிக்கவில்லை என்பது தான் நமக்கு கிடைத்த தகவலாகும்.

இருக்கும் இடம் தெரியாமல்: பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் பேட்டி, பொதுக்கூட்டம் என எதிலும் வாய் திறக்காமல் இத்தனை நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வந்தார். இப்போது நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அதிமுக மேடைகளில் பழையபடி பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்.
இரட்டை இலை சின்னம்: அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சாமானியர்களின் ஆட்சி அதிமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை என 40க்கு 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என பேசியவர், யார் பிரதமர் என்பதை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யும் வகையில் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்றார்.
பிரதமராக வாய்ப்பு: இதற்கு அடுத்துத் தான் ஒரு ட்விஸ்ட் வைத்தார். சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என பேசினார். ராஜேந்திரபாலாஜியின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த அதிமுகவினரே லேசாக ஜெர்க் ஆகினர். ஏனெனில் பாஜகவை அதிமுக கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதாக அறிவித்தாலும் கூட பிரதமர் மோடி பற்றி இதுவரை எந்த இடத்திலும் விமர்சிக்காதவர் எடப்பாடி பழனிசாமி.
தர்ம சங்கடம்: இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்பிருப்பதாக பேசி அவரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளார் ராஜேந்திரபாலாஜி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி போன்றோர் வாயை திறந்தாலே வைரல் கண்டெண்ட்களுக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications