“எடப்பாடி உத்தரவு போட்டா நாங்க 1000 பேர் யுத்த களத்தில் சண்டையிட தயார்”! கொந்தளித்த ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் நேற்று நள்ளிரவில் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது இந்தியா.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது ஏவுகணை தாக்குதலை முப்படைகள் கூட்டாக இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலில், பல பெண்களின் கண் எதிரிலேயே அவர்களின் கணவர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே இந்த துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது. அதன்படி, திருமணமான பெண்கள், நெற்றி வகிடில் வைக்கும் குங்குமத்தை (இந்தியில் சிந்தூர்) குறிக்கும் விதமாகவே, இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நிலவும் போர் பதற்றம், இந்தியாவின் தற்போதைய பதிலடி தாக்குதல் எல்லாம் சேர்ந்து, இந்தியா - பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை போர் ஒத்திகையும் நடைபெறுகிறது.
ராஜேந்திர பாலாஜி பேட்டி
இந்நிலையில், சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து பயங்கரவாதத்தை ஒடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாரட்டுகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை நாங்கள் முழு மனதோடு பாராட்டுகிறேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டளைப்படி நடக்கும் நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிசாமி உத்தரவு கொடுத்தால் யுத்த களத்தில் பணியாற்றவும் தயாராக உள்ளோம்.
யுத்த களத்தில் சண்டை போட தயார்
போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் பயிற்சி பெற்று எனது தலைமையில் போர்க்களத்தில் போரிட செல்வதற்காக 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன்.
4-ஆண்டுகள் நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள், ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் மதுக்கடையை மூடுவோம் எனச் சொன்னார்கள். தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கனிமொழி சொன்னார். ஆனால் மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள்.
புளுகு மூட்டை
அரிசி, பருப்பு, செங்கல் விலை என அனைத்துப் பொருட்களின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் சிறப்பையும், ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் வகுத்து பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது பொய்யா? ஸ்டாலின் சொல்வது பொய்யா? என்பது மக்களுக்கு தெரியவரும். ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அது நடக்காது. திமுகவிற்கு மக்கள் சம்மட்டி அடி அடிப்பார்கள். குரு பெயர்ச்சியில் திமுகவிற்கு இறங்கு முகம். அதிமுகவிற்கு ஏறுமுகம். திமுகவின் ஆட்சியில் முதல்வரை தவிர அரசு ஊழியர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான தக்க பதிலடி 2026-தேர்தலில் கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications