வீரியமாக பரவும் கொரோனா - ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை முழு லாக்டவுன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விருதுநகர்: சென்னை, மதுரையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால் அங்கு ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என துணை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக அளவில் 3வது இடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5573 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 2500 பேர் மீண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் நோய் தொற்று அதிகமான காரணத்தால் வரும் இன்று ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள 28 கிராமங்கள் உட்பட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தபட உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சுகாதார தடுப்பு பொறுப்பு துணை ஆட்சியர் முருகன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் மற்ற கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல கோயம்புத்தூரிலும் இரண்டு நாட்கள் மட்டும் தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications