கேடிஆர்க்கு ஸ்கெட்ச் போட்ட நல்லதம்பி! அவரும் இப்போ மாட்டிக்கிட்டார்! கட்டு கட்டாய் பணம்.. வீடியோ!
விருதுநகர் : முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் கொடுத்த அதிமுக பிரமுகர் விஜயநல்லதம்பி சத்துணவு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட தலைமறைவானார்.
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனிப்படை போலீசார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி
கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விஜய நல்ல தம்பி
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் விஜய நல்ல தம்பி. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமு தேவன் பட்டியை சேர்ந்தவர் விஜய நல்ல தம்பி. முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். மேலும் இவர் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் ஆவார். விஜய நல்ல தம்பி கடந்த 2020ம் ஆண்டு அதிமுகவின் ஒன்றிய செயலாளராக இருந்த போது தன்னுடைய கார் ஓட்டுநரான தாயில்பட்டி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் உன்னுடைய மனைவி கிருஷ்ணவேணிக்கு 3.50 லட்சம் கொடுத்தால் சத்துணவில் வேலை வாங்கி தருவாக கூறி உள்ளார்.

இவரும் மோசடி
இதனை நம்பிய தங்கதுரை தன்னுடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து 3.50 லட்சம் பணத்தை ராமு தேவன் பட்டியில் உள்ள விஜய நல்ல தம்பியின் வீட்டில் வைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணத்தை கொடுத்து உள்ளார். அதனை தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் பதிவு செய்து உள்ளார். அப்போது பேசிய விஜயநல்லதம்பி சத்துணவு பணிக்கு 14ம் தேதி இன்டர்வியூ 15ம் தேதி வேலைக்கான ஆர்டர் வந்து விடும் என கூறுகிறார்.

3.50 லட்சம்
அதே போல் தாங்கள் கொடுக்கும் 3.50 லட்சம் பணத்தில் அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியருக்கும் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார். இந்த நிலையில் தான் தங்கதுரை மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவில் வேலை வாங்கி கொடுக்காமல் 3.50 லட்சம் பணத்தை விஜய நல்ல தம்பி மோசடி செய்து உள்ளார். இந்த நிலையில் விஜய நல்ல தம்பி சத்துணவில் வேலை வாங்கி தருவதாக 3.50 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக கிருஷ்ணவேணி கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

வீடியோ
புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விஜய நல்ல தம்பி மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜய நல்ல தம்பியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரையிடம் விஜய நல்ல தம்பி பணம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த விஜய நல்ல தம்பி தான் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீதும் தன்னுடைய உடன் பிறந்த சகோதரர் மீதும் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications