விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? வேட்புமனுவில் கிடைத்த தகவல்
விருதுநகர்: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ 17 கோடி என வேட்புமனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.
பவுர்ணமி நன்னாள் மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் அதிமுக, திமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலுக்காக வேட்புமனுவை வேற்று தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் அவரவர் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகாவும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள்.
எனவே இது நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும் அவருடைய மகன் போட்டியிடுகிறார் என்பதாலும் அனைவரது கண்களும் தேமுதிக வேட்பாளர்கள் மீதே இருக்கின்றன.
விஜய பிரபாகரன் நேற்றைய தினம் விருதுநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அந்த வேட்புமனுவில் அவர் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது விஜய பிரபாகரனுக்கு ரூ 17 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் 6.57 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அது போல் தனது தாய் பிரேமலதாவுக்கு ரூ 6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் ரூ 48 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும் அவர் கணக்கு காட்டியுள்ளார்.
விஜயகாந்த் இருந்தவரை அவர் கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரராகவே இருந்தார். தன் கை காசை போட்டு நலத்திட்டங்களையும் அன்னதானத்தையும் செய்து வந்தார். இல்லை என தன்னை தேடி வருவோருக்கு உதவிகளை செய்திருந்தார். விஜயகாந்தால் நிறைய கலைஞர்கள் நல்வாழ்வு பெற்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்தின் சொத்து மதிப்பு ரூ 19.37 கோடியாகவும் மனைவி பிரேமலதாவின் சொத்து மதிப்பு ரூ 17 கோடியாகவும் இருந்ததாக வேட்புமனுவில் தாக்கல் செய்திருந்தார். விஜயகாந்த்துக்கு ரூ.4.82 கோடி கடன் இருப்பதாகவும், பிரேமலதாவுக்கு ரூ.41 லட்சம் கடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் 2011ல் விஜயகாந்த் போட்டியிட்டபோது ரூ.20 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார். கையிருப்பாக 6 லட்ச ரூபாய், மனைவி கையிருப்பு 6 லட்சம், வங்கி வைப்பு நிதி 1.56 லட்சம் ரூபாய், ஆண்டாள் அழகர் மண்டபம், கேப்டன் பார்ம் லிட்., பங்குகளாக 3 கோடியே 68 லட்சம் ரூபாய், கேப்டன் மீடியா நிறுவன பங்கு 10 கோடி ரூபாய், சொனாடா கார், டெம்போ டிராவலர், போர்ட் எண்டவர் வாகனங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல, தன் பெயரில், 9 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயும், மனைவி பெயரில் 1.28 கோடி ரூபாயும் வைத்துள்ளதாகவும், அசையா சொத்து: மதுராந்தகம் கரடிப்புத்தூர் இருகூர் பகுதியில் 12.46 கோடி ரூபாய் மதிப்பில் 61 ஏக்கர், மனைவி பெயரில் 8.47 கோடி ரூபாய் மதிப்பில் 39 ஏக்கர், மகன் பெயரில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 ஏக்கர் நிலம். விவசாய மற்ற நிலங்களாக விஜயகாந்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், மனைவி பெயரில் 4 கோடியே 43 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜயகாந்த் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் மற்றும் கடனாக 7 கோடியே 52 லட்சமும், வங்கிக் கடனாக 2 கோடியே 54 லட்ச ரூபாயும் இருந்தது என குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications