விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை? தேர்தல் ஆணையரை சந்தித்து விஜயபிரபாகரன் மனு.. ரிசல்ட் மாறப்போகுதா?
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தோல்வியடைந்தார். ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக தேமுதிக குற்றம்சாட்டிய நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி டெல்லியில் இன்று விஜயபிரபாகரன் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார். இதனால் விருதுநகரில் ரிசல்ட் மாறப்போகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி வேட்பாளர்கள், சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்த ஓட்டு எண்ணிக்கையின்போது விருதுநகர் லோக்சபா தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பியாக மீண்டும் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு இருந்தார். பாஜக சார்பில் ராதிகா களமிறங்கி இருந்தார்.
இதில் தொடக்கம் முதலயே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் அவர்கள் 3 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்றார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோற்றுப்போனார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா 1,66,271 வாக்குகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு விஜயபிரபாகரனின் தாயும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரருமான பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‛‛விருதுநகரில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்தது. சூழ்ச்சி செய்து விஜயபிரபாகனை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டர் பிரஷர் தாங்க முடியாமல் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்யும் வகையில் தவறு நடந்துள்ளது. இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என்று கூறினார்.
அதோடு தேமுதிக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் விஜய பிரபாகரன் டெல்லி சென்றார். டெல்லியில் இன்று மாலை விஜயபிரபாகரன் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையரிடம், விருதுநகர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. இதனால் 4,379 என்ற குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளேன். இங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்து அதற்கான மனுவை அளித்து உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், "விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. இது தொடர்பான உரிய ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
விஜய பிரபாகரனின் மனுவை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். இதனால் விருதுநகர் லோக்சபா தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்படுமா? அப்படி உத்தரவிட்டால் ரிசல்ட் மாறுமா? அல்லது மீண்டும் மாணிக்கம் தாகூர் தான் வெல்வாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications