இந்தியாவுடன் விரிசல் வந்தது இப்படித்தான்! பெருமையாக சொன்ன டிரம்ப்.. அமெரிக்காவின் நோக்கமே இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மீது வரி விதித்தது பற்றி பெருமையாக டிரம்ப் தம்பட்டம் அடித்துள்ளார். அதாவது "இந்தியா மீது வரி விதிப்பது சாதாரண காரியமில்லை. நான் அதனை செய்துள்ளேன். இதனால் இருநாடுகள் இடையே விரிசலை ஏற்படுத்துகிறது'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமையாக கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனை நம் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. நியாயமற்ற முறையில் அமெரிக்க வரி விதித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம்ப் கண்டுக்கொள்ளவில்லை. இந்த வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு செல்லும் நம் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்புக்கு ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். இதனால் தான் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரி விதித்துள்ளார். இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சிக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.
அப்போது உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கட்டுப்படுத்துவது எப்படி? என்ற பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இந்தியாவை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார். இதுபற்றி டிரம்ப் கூறுகையில், ‛‛இந்தியா, ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் தான் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தேன். இப்படி செய்தது எளிதான காரியமில்லை. அது ஒரு பெரிய விஷயம். இதுதான் இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்துகிறது.
ஆனாலும் நான் செய்துள்ளேன். நான் நிறைய விஷயங்களை இப்படி செய்துள்ளேன். உண்மையில் இது எங்களை விட ஐரோப்பியாவின் பிரச்சனையா தான் பார்க்க வேண்டும். நான் 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். இதில் பாகிஸ்தான் - இந்தியா போரும் அடங்கும். அதுமட்டுமின்றி சில தீர்க்கப்படாத போர்களும் உள்ளன. காங்கோ - ருவாண்டோ போரை நான் முடித்து வைத்தேன். இது 31 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நான் முடித்து வைக்க முடியாத போர்களை முடித்து வைத்து வருகிறேன்'' என்றார்.
முன்னதாக இந்தியா - ரஷ்யா உறவு பற்றி நம் நாட்டின் புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் கருத்து தெரிவித்தார். இதுபற்றி அவர், ‛‛இந்தியா - அமெரிக்கா இடையேயான வரி விவகாரம் சார்ந்த பிரச்சனை வரும் வாரங்களில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். இந்தியா, ரஷ்யாவுக்கு பதில் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும'' என்று கூறியிருந்தார்.
அதேபோல் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், ‛‛ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும்'' என்று கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் அமெரிக்காவில் உள்ளவர்களின் மொத்த எண்ணமும் நம் நாடு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்பதை தான் மாறிமாறி வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தியா இதனை ஏற்பது கடினம். ஏனென்றால் அமெரிக்காவை விட ரஷ்யா நம் நட்பு நாடு. இருநாடுகள் இடையே காலம் காலமாக நல்ல உறவு உள்ளது. அமெரிக்கா பலமுறை நம் நாட்டின் முதுகில் குத்தி உள்ளது. ஆனால் ரஷ்யா எப்போதும் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்போதும் நம் நாட்டுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா வழங்கி வருகிறது. நம் நாட்டின் தேவையில் 36 முத்ல 38 சதவீத கச்சா எண்ணெயை ரஷ்யா தான் வழங்குகிறது. இதனால் அமெரிக்கா சொல்வது போல் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாது என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications