இரவோடு இரவாக வந்த மெயில்.. இந்தியாவுக்கான ஆர்டர்களை தடாலடியாக நிறுத்தி வைத்த அமெரிக்க நிறுவனங்கள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரிகளை விதித்துள்ளார். இது இரு நாட்டு வர்த்தக உறவுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. டிரம்ப் வரியால் இந்தியாவில் இருந்து செல்லும் ஏற்றுமதிகள் கடுமையாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஏற்கனவே பல முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்குக் கொடுக்கும் ஆர்டர்களை நிறுத்தி வைக்க ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டரம்ப் கடந்த மாத இறுதியில் திடீரென ஒரு பெரிய உத்தரவைப் பிறப்பித்தார். அதாவது இந்தியாவுக்கு 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் உத்தரவிட்டார். அடுத்த சில நாட்களிலேயே வரியை 50%ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார். இது இரு நாட்டு வணிக உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியா அமெரிக்கா உறவு
இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான வணிக பார்ட்டனராக அமெரிக்கா இருக்கிறது. அந்தச் சூழலில் திடீரென டிரம்ப் விதித்த இந்த வரியால் இந்திய ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே டிரம்பின் வரியைத் தொடர்ந்து வால்மார்ட், அமேசான், டார்கெட், கேப் போன்ற முன்னணி அமெரிக்கச் சில்லறை வணிக நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஆர்டர்களை கொடுப்பதை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆர்டர்கள் நிறுத்தி வைப்பு
மறு அறிவிப்பு வரும் வரை ஆடை மற்றும் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க நிறுவனங்கள் நம்ம ஊர் ஏற்றுமதியாளர்களுக்குக் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரி காரணமாகக் கூடுதல் செலவாகும் நிலையில், அந்த தொகையை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்க தயாராக இல்லை.
மாறாக இந்த கூடுதல் தொகையை இந்தியாவிலுள்ள ஏற்றுமதியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்த புதிய வரிகள் காரணமாகப் பொருட்களின் விலை 30% முதல் 35% வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அமெரிக்காவிற்கான ஆர்டர்கள் 40% முதல் 50% வரை குறையலாம் என்றும் இதனால் சுமார் $4-5 பில்லியன் இழப்பு ஏற்படும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெரும் பாதிப்பு
வெல்ஸ்பன் லிவிங், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுன்ட் மற்றும் டரைடென்ட் போன்ற முக்கிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து தான் 40% முதல் 70% வரையிலான ஆர்டர்கள் கிடைத்து வந்தன. மேலும், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறையினர் தங்கள் ஏற்றுமதியில் கணிசமானவற்றை அமெரிக்காவிற்கே அனுப்பி வந்தனர்.. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28% அதாவது $36.61 பில்லியன் அமெரிக்காவுக்குச் சென்றது. இவை எல்லாம் இப்போது ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
உலகிலேயே ஆறாவது பெரிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளரான இந்தியா, இந்த வரிகளால் வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஆர்டர்களை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. ஏனென்றால் இந்த நாடுகளுக்கு 20% வரியை மட்டுமே டிரம்ப் விதித்துள்ளார்.
டிரம்ப் வரி
டிரம்பை பொறுத்தவரை ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக இந்தியாவுக்கு இந்த வரியை விதித்துள்ளார். இதில் 25% வரி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 25% வரி ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிரம்பின் இந்த நடவடிக்கையை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றவை என்றும் இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications