விண்வெளியில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா செய்யப்போகும் ஆய்வுகள் என்ன? ஏன் முக்கியம் தெரியுமா
வாஷிங்டன்: ஆக்சிம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 14 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவிட்டு அவர் பூமி திரும்ப உள்ளார். சுபான்சு ஷுக்லா விண்வெளியில் செய்யப்போகும் ஆய்வுகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு வாரங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் சுபான்ஷூ சுக்லா ஆய்வு செய்கிறார். இவர் உள்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டுள்ளனர். மொத்தம் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

7 ஆய்வுகள் செய்கிறார் சுபான்ஷூ சுக்லா
இதில் இந்தியாவுக்காக 7 ஆய்வுகளை சுபான்ஷூ சுக்லா செய்கிறார். ஏற்கனவே ஆறுமுறை இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பால்கன் ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு திட்டமிட்டப்படி இந்த பயணம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு விங் கமாண்டர் ராகேஷ் சர்மா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். 8 நாட்கள் ராகேஷ் சர்மா விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு பிறகு இந்திய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 36 மணி நேரம் பயணித்து இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறது. இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளியில் செய்யப்போகும் ஆய்வுகள் என்ன என்பது உள்பட சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்.
உடலின் தசை செயல்பாடுகள்
* சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுள்ள 4 பேரும் நாளை மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைவார்கள்.
* விண்வெளி பயணத்திற்காக கடந்த ஒரு ஆண்டாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் சுபான்ஷூ சுக்லா பயிற்சி மெற்கொண்டு இருந்தார்.
* சுபான்ஷூ சுக்லா விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
* குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசை செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது.
* சுக்லா மேற்கொள்ளும் மற்றொரு முக்கிய ஆராய்ச்சி, விண்வெளியில் உண்ணக்கூடிய நுண்ணுயிர் பாசிகளின் மீது நுண் ஈர்ப்பு கதிர்வீச்சின் தாக்கம். ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் இந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை அவர் ஆய்வு செய்வார்.
நீரிழிவு நோயாளிகள் விண்வெளி பயணம்
* இந்த சோதனை சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் (ICGEB) மூலம் வடிவமைக்கப்பட்டது. நுண்ணுயிர் பாசிகள் நீண்ட விண்வெளிப் பயணங்களுக்கு உணவை நிலையாக உற்பத்தி செய்ய உதவுவதால், சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நீரிழிவு நோயாளிகள் விண்வெளிக்கு பயணம் செய்வதைச் சாத்தியமாக்குவதும், இந்த Axiom பணியின் முக்கிய ஆராய்ச்சிகளில் ஒன்றாகும். தற்போது, இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயாளிகள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
* நுண் ஈர்ப்பு விசை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதையும் பராமரிப்பதையும் கடினமாக்குகிறது. இந்த சோதனையில், விண்வெளி வீரர்கள், இரண்டு வாரங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் போது தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் கருவியை அணிவார்கள்.
டிராகன் கேப்சூலின் கட்டுப்பாட்டு அமைப்பு
* சுபான்ஷூ சுக்லா, விண்கலத்தை இயக்குதல், ஏவுதல், சுற்றுப்பாதையில் செலுத்துதல், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுத்துதல் மற்றும் தரையிறக்குதல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட உள்ளார்.
* விண்கலத்தின் மறு நுழைவு மற்றும் தரையிறங்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றுவார். மேலும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுடன் தகவல் தொடர்புகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவர் ஈடுபட உள்ளார்.
* மென்பொருள் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால், டிராகன் கேப்சூலின் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேனுவல் முறையில் இயக்குவதற்கு இந்திய விண்வெளி வீரருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications