பிரதமர் மோடி ஸ்டைலில் பைடன்... அதிபர் பதவியேற்று 60 நாள் ஆச்சு.. நோ பிரஸ் மீட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்று சுமார் 60 நாட்கள் நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி ஸ்டைலில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை.
ஜோ பைடன் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். இருப்பினும், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, பைடன் பதவியேற்பு விழாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
எல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாக பைடன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி, அந்நாட்டின் 49ஆவது அதிபராகப் பதவியேற்றார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்றார்.

அதிரடி காட்டி பைடன்
பதவியேற்றது முதலிலேயே பைடன் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ சுவர், இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட டிரம்பின் உத்தரவுகளை ரத்து செய்தார். அதன் பின்னர், ஏமன் போருக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெறுவது, உலக சுகாதார அமைப்பு, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் மீண்டும் உத்தரவு என அதிரடி காட்டினார் பைடன்.

குஷியில் அமெரிக்கர்கள்
அதிலும் குறிப்பாக, கடந்த வாரம் பைடன் கொண்டுவந்த திட்டம் அனைத்து அமெரிக்கர்களையும் குஷியாக்கிவிட்டது. கொரோனா காரணமாக வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டாலர் (இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்) வழக்கும் மிகப் பெரிய நிதியுதவி திட்டத்திற்கு பைடன் ஒப்புதல் அளித்தார். இது அமெரிக்கக் குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நோ பிரஸ் மீட்
இருப்பினும், பைடன் மீது முக்கிய குற்றச்சாட்டை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முன் வைக்கிறார்கள். பைடன் பதவியேற்று கிட்டதட்ட 60 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவர் ப்ரஸ் மீட்டை நடத்தவில்லை. இது அவரது நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்பும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மோசமான சாதனை
கடந்த 100 ஆண்டுகளிலேயே அதிபராகப் பதவியேற்ற பின், முதல் ப்ரஸ் மீட்டை நடத்த அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் அதிபர் என்ற மோசமான சாதனையை பைடன் படைத்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டன், ரொனால்ட் ரீகன் ஆகியோர் முதல் வாரத்திலேயே ப்ரஸ் மீட்டை நடத்தினார்கள். முன்னாள் அதிபர் ஒபாமா 20 நாட்களில் தனது ப்ரஸ் மீட்டை நடத்தினார்.

முன்னாள் அதிபர் டிரம்ப்
அவ்வளவு ஏன், எல்லா ப்ரஸ் மீட்டிலும் செய்தியாளர்களுடன் சண்டை போடும் டிரம்ப் கூட ஒரே வாரத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால், பைடன் 60 நாட்கள் நெருங்கியுள்ள நிலையும்கூட இதுவரை ப்ரஸ் மீட்டை நடத்தாதது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கமும் விமர்சனமும்
அதிபர் பைடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது, நிதியுதவி உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாலேயே அவரால் செய்தியாளர் சந்திப்பை நடத்த முடிவதில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், செய்தியாளர்களின் கடினமான கேள்விகளுக்குப் பயந்து பைடன் அஞ்சுவதாகக் குடியரசு கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

மோடி ஸ்டைல்
நம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கிட்டதட்ட அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் நேர்காணல் அளித்தார். மேலும், அடிக்கடி செய்தியாளர் சந்திப்பையும் நடத்துவார். ஆனால், பிரதமராகப் பதவியேற்ற பின் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு முறைகூட செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தவில்லை. அதேபோலவே பைடனும், தேர்தலுக்கு முன் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வந்தார். ஆனால் அதிபராகப் பதவியேற்றதும் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.












Click it and Unblock the Notifications