அமெரிக்காவில் குண்டுவெடிப்பு.. கலிபோர்னியா மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்! களத்தில் இறங்கிய FBI
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திடீரென வெடி சம்பவம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அங்குத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் அது கருப்பு நாளாகவே கருதப்படுகிறது. அங்கு நடந்த மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டது.

இதனால் அங்கு தீவிரவாதம் பெருமளவு ஒழிக்கப்பட்டது. தீவிரவாத செயல்களும் நடக்காமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிரபலமான பாம் ஸ்பிரிங்ஸ் பகுதியில் திடீரென வெடி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
வெடி சம்பவம்
அங்கு மருத்துவமனை அருகே ஏற்பட்ட இந்த வெடி சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், சுமார் ஐந்து பேர் காயமடைந்தனர். இதை எஃப்.பி.ஐ அமைப்பு பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த நபரை விசாரிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் எஃப்.பி.ஐ உதவி இயக்குநர் அகில் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத செயல்
இது தொடர்பாக அகில் டேவிஸ் மேலும் கூறுகையில், "இந்த வெடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவமனைக்கு வெளியே காரில் நின்று கொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். அவரை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதைப் பார்த்தால் பயங்கரவாத செயல் போலவே இருக்கிறது. இது சர்வதேச பயங்கரவாதமா அல்லது உள்நாட்டுப் பயங்கரவாதமா என்பதை எஃப்.பி.ஐ விசாரித்து வருகிறது" என்றார்.
வெடி விபத்து தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மருத்துவமனையில் இருந்து கறுப்பு நிற புகை வெளியாவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வெடி சம்பவத்தால் லேசான தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதை அணைக்கும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எஃப்.பி.ஐ அமைப்புடன் இணைந்து உள்ளூர் விசாரணை அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பெரிய பாதிப்பு இல்லை
அமெரிக்கன் இனப்பெருக்க மையம் என்ற மருத்துவமனையில் தான் இந்த வெடி சம்பவம் நடந்துள்ளது. இதை மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் மஹர் அப்துல்லா உறுதி செய்துள்ளார். தனது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நல்வாய்ப்பாக வெடி சம்பவம் நடந்த போது அங்கு நோயாளிகள் யாரும் இல்லை. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
விசாரணை
அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற ஒரு முக்கியமான மாகாணத்தில் இந்த வெடி சம்பவம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது பயங்கரவாத செயலாக இருக்கலாம் என் சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. எதனால் இந்த வெடி சம்பவம் ஏற்பட்டது.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.. இதன் நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் விசாரணையில் விரைவில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications