கடைசி நிமிடத்தில் மாறிய ரூட்! அமெரிக்கா பாலத்தில் மோதிய சரக்கு கப்பல்.. பயங்கரவாத செயலா? பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அரங்கேறிய பால விபத்து பகீர் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் அந்த பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது, அந்த பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதிய போது மேலே பல வாகனங்கள் சென்று கொண்டு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் குறைந்தது 20 பேர் நீர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக ஷாக் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கப்பல் விபத்து: அந்தக் கப்பல் மோதிய உடன் பல சிறு சிறு வெடிப்புகள் கேட்கும் நிலையில், தொடர்ந்து அந்த கப்பல் அப்படியே சரிகிறது. இந்த விபத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜில் தான் சரக்கு கப்பல் மோதியுள்ளது. அந்த சரக்கு கப்பலை மார்ஸ்க் என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இருக்கிறது. இதற்கிடையே பால விபத்து குறித்தும் அங்கே நிலவும் சூழல் குறித்தும் உன்னிப்பாகக் கவனித்த வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முதலில் ஆற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாறிய ரூட்: பாலத்தில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தான் மோதி இருக்கிறது. கடைசி நேரத்தில் அந்த கப்பல் தனது ரூட்டை மாற்றியதாலேயே அது பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்போது அந்த கப்பலின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த கப்பல் பாலத்தில் மோதியதற்கு என்ன காரணம் அல்லது அதன் மின்விளக்குகள் அணைந்து அணைந்து ஒளிரவும் என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை. மேலும், கடைசி நேரத்தில் அது ஏன் தனது திசையை மாற்றியது என்பதும் தெரியவில்லை.
இலங்கையின் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு கப்பல் டாலி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:26 மணிக்குப் பாலத்தின் தூணை நோக்கி திசை மாறி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு நிமிடங்களில் அதாவது 1.28க்கு அந்த கப்பல் தூண் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்து அதிகாலையில் நடந்தாலேயே பெரியளவில் தேசம் ஏற்படவில்லை.
பயங்கரவாதிகள் செயலா: அதேநேரம் வழக்கமான ரூட்டில் பயணித்துக் கொண்டு இருந்த சரக்கு கப்பல் திடீரென தனது ரூட்டை மாற்றியதால் இது பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.
தற்போது வரை இருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது பயங்கரவாத தாக்குதலைப் போலத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பும் விசாரணையில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications