தேர்தலில் ஜெயிக்க வைத்தால்.. ரூ.4.2 லட்சம் தருவோம்! ஆஃபரை அள்ளி கொடுக்கும் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரவிருக்கும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தை கைப்பற்றினால், ஒவ்வொரு அமெரிக்க முதியோருக்கும் ரூ.4.2 லட்சம் ($5,000) வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
நம்மூரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறதே, கிட்டத்தட்ட அதுமாதிரியான திட்டத்தைதான் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதில் ஒரே வித்தியாசம் என்னவெனில், மகளிர் உரிமைத்தொகை மாதம் மாதம் வரும். ஆனால், டிரம்ப் சொன்ன பணம் ஒரே ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

டல்லாஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் மாநாட்டில் பேசிய அவர், இந்த நிதியுதவிக்கு டிரம்ப் டிவிடெண்ட் என்று பெயரிட்டிருக்கிறார். தற்போதைய கருத்துக்கணிப்புகளில் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்து வருவதால், வாக்காளர்களை ஈர்க்க டிரம்ப் இந்த அசாதாரணமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
மேலும், இந்த தேர்தலில் தனது பெயர் வாக்கு சீட்டில் இருப்பதாக கற்பனை செய்துக்கொண்டு தனக்காக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். டிரம்ப் சொன்னது போல, அமெரிக்காவில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் ரூ.4.2 லட்சத்தை கொடுக்க வேண்டும் எனில், சுமார் 1 டிரில்லியன் டாலருக்கு மேல் நிதி தேவைப்படும். இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியாது. இதைப்பற்றி டிரம்ப் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. நமது நாடு நிறைய பணம் சம்பாதித்து வருகிறது என்று பேசி வருகிறார்.
அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு, ஈரான் மீதான போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு ஆகியவை அந்நாட்டு மக்களை டிரம்புக்கு எதிராக கொந்தளிக்க வைத்திருக்கிறது. டிரம்புக்கு அந்நாட்டு மக்கள் கொடுக்கும் ஆதரவு வெறும் 30% என்கிற அளவில்தான் இருக்கிறது. மட்டுமல்லாது இந்த இடைத்தேர்தலில் எதிர்கட்சியே வெற்றி பெறும் என்கிற நிலை இருக்கிறது.
நிதி எங்கிருந்து வருகிறது?
ஒவ்வொருவருக்கும் ரூ.4.2 லட்சம் என்பது பெரிய தொகை. இதற்காக பணத்தை பங்குச்சந்தையில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் ஒருமுறை லாப பங்குத் தொகை போல குறிப்பிட்டு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த தொகையை வாங்கும் அமெரிக்கர்கள், அதை அமெரிக்காவுக்குள்தான் செலவிட வேண்டும் என்று விநோதமான நிபந்தனையையும் டிரம்ப் விதித்திருக்கிறார்.
இதற்காக மொத்தம் ரூ.109 லட்சம் கோடி செலவாகும். அதாவது இந்த பணத்தை வைத்து இந்தியாவுக்கு 2 ஆண்டுக்கு பட்ஜெட்டை போட்டுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
