கொரோனா விஸ்வரூபம் : 28 கோடி பேர் உலகம் முழுவதும் பாதிப்பு - 25 கோடி மக்கள் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 28 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா 4வது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,79,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,03,13,930 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 25,03,40,397 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யாவில் கொரோனா பாதிப்பினால் தினசரியும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,985 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,16,273 பேர் உயிரிழந்துள்ளனர்.

95,120 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 95,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்த நிலையில் இன்று ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,16,273 பேராக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் மொத்தம் 8,37,854 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,19,14,919 பேர் பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,14,919 அதிகமாக உயர்ந்துள்ளது. அங்கு ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும் வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மரணங்கள்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,721 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 968 பேர் மரணமடைந்துள்ளனர். துருக்கி நாட்டில் 20,138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,07,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,576 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் 27,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 91,16,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,22,642 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 24,883 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 56,47,313 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 136,611 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications