திடீர்னு எப்படி ஈரானுக்கு இவ்வளவு பலம்.. அமெரிக்க ஆய்வில் வெளியான ஷாக் தகவல்! பின்னணியில் சீனா!
வாஷிங்டன்: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது சமீபத்தில் ஈரான் பலமாக தாக்குதல் நடத்தியிருந்தது. இத்தனை நாட்களாக இலக்கு தெரியாமல், தாறுமாறாக தாக்குதல் நடத்தியிருந்த ஈரான் இப்போது மட்டும் எப்படி சரியாக குறி பார்த்து அடித்திருக்கிறது? என்று கேள்வி எழுந்திருந்தது. அமெரிக்கா இது குறித்து விசாரிக்கையில், பின்னணியில் சீனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 17ம் தேதி ஜோர்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் முவாஃபக் சால்டி ராணுவ விமானத்தளம் மீது ஈரான் துல்லியமாக ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 வீரர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பும், நடத்திய பின்பும் அந்த ராணுவ தளத்தின் மிக துல்லியமான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஈரான் சீனத் தரப்பிடமிருந்து பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான ஆதாரத்தையும் அமெரிக்க ராணுவம் கொடுத்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.
அதாவது ஜூலை 17 தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் முவாஃபக் சால்டி விமான தளத்தின் தற்போதைய வரைபடம் மற்றும் வீரர்கள் தூங்கும் இடங்கள் குறித்த துல்லியமான செயற்கைக்கோள் படங்களை ஈரான் பெற்றுள்ளது. ஏற்கெனவே ஈரானின் சொந்த ரேடார்களை அமெரிக்கா அழித்துவிட்டது. அப்படியெனில், சீனாவின் உதவி இல்லாமல் நிச்சயம் இந்த படங்களை பெற்றிருக்க முடியாது என்பதுதான் அமெரிக்காவின் கணிப்பு.
ஈரானின் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு பிறகு, சேதங்கள் குறித்த உயர் தெளிவுதிறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை ஈரான் வெளியிட்டிருந்தது. இந்த படங்கள் சீனாவின் வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனங்களிடமிருந்து பெற்றதாக அமெரிக்கா கண்டுபிடித்திருக்கிறது. அதேபோல அமெரிக்க படைகளை குறி வைக்க தேவையான உளவு படங்களையும், நேவிகேஷன் தொழில்நுட்பங்களையும் வழங்கியதாக கூறி மிசார்ட் விஷன், எர்த் ஐ மற்றும் சாங் குவாங் ஆகிய 3 சீன நிறுவனங்களை அமெரிக்க அரசு ஆதாரங்களுடன் கண்டறிந்து அவற்றின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது.
ஆனால், சீனா இந்த விஷயத்தை முழுமையாக மறுத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரத்தை சீன தரப்பிடம் கொண்டு சென்றபோது, அவர்கள் இந்த ஆதாரங்கள் போதாது என்று கூறி கூடுதல் ஆதாரங்களை கேட்டதுடன், சீன நிறுவனங்கள் இத்தகைய உதவிகளை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செப்.24ம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே முக்கிய சந்திப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, ந்த சந்திப்புக்கு முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் இந்த விஷயத்தை தூதரகம் மூலம் அமெரிக்கா கையாண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
