அதிபர் தேர்தலில் வாக்களித்தால் சம்பளம் "கட்.." அமெரிக்காவில் உள்ள வினோத சிக்கல்.. இது தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். அதேநேரம் நமது நாட்டை போல அமெரிக்காவில் தேர்தல் நாள் விடுமுறை இல்லை என்பது பலருக்கும் தெரியாது ஒன்று.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்குகிறார்.

அதிபர் தேர்தல்: இந்த முறை முதலில் கமலா ஹாரிஸுக்கு முன்னிலை இருப்பது போலத் தெரிந்தது. ஆனால், தேர்தல் தேதி நெருங்க நெருங்க கடும் போட்டி நிலவியது. கடைசிக்கட்ட கருத்துக்கணிப்புகளில் இரு தரப்புக்கும் சம ஆதரவு இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. இதனால் கடைசி நேரம் வரை இரு தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இரு தலைவர்களுமே பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் அங்கு ஒரு தரப்பு மக்கள், குறிப்பாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்வோர் வாக்களிக்கத் தயங்குவார்கள். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
மாகாணம் வாரியாக: நமது நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி அதை டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையமே நடத்தும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தலாக இருந்தாலும் கூட அதை அந்தந்த மாகாணங்களே நடத்தும். இதனால் விதிகள் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும்.
விடுமுறை இல்லை: மேலும், அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நமது ஊரில் தேர்தல் நாள் என்பது அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. எது வாக்குப்பதிவு நாள் கூட அரசு விடுமுறை இல்லையா என்று உங்களுக்கு அதிர்ச்சி இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அமெரிக்காவில் வாக்குப்பதிவு நாள் என்பது தேசயளவிலான பெடரல் விடுமுறை இல்லை.
அதேநேரம் 5 மாகாணங்களில்- நியூயார்க், மேரிலாந்து, மேற்கு வர்ஜீனியா, ஹவாய் மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் மட்டும் அது பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மாகாணங்களில் மக்களுக்கு விடுமுறை இல்லை என்றாலும். வாக்களிக்கச் சென்று வரும் நேரமும் வேலை செய்ததாகவே கருதப்படும். அதேநேரம் அலபாமா, ஆர்கன்சாஸ், கென்டக்கி, மாசசூசெட்ஸ் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் வேலைக்கு இடையில் மக்கள் வாக்களிக்கச் செல்லலாம் என்ற போதிலும், அதற்கான ஊதியம் கிடைக்காது.
சம்பளம் கட்: இப்படி மாகாணத்திற்கு மாகாணம் அங்கே ரூல்ஸ் மாறுபடும். இதன் காரணமாகவே வெயிடர் உள்ளிட்ட குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை செய்வோர் வாக்களிக்கப் பெரியளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மேலும், நமது நாட்டுடன் ஒப்பிடும் போது அங்கு வாக்குப்பதிவு மையத்திற்குச் செல்லவும், வாக்களித்துவிட்டுத் திரும்பவும் அதிக நேரம் ஆகும். இதனால் சம்பளத்தை இழக்க நேரிடும் என்பதால் பலர் வாக்களிக்கத் தயங்குவார்கள். இதுவே அங்கு ஒரு பெரிய சிக்கலாக இருக்கிறது.
அதேநேரம் அமெரிக்கர்களுக்கு வேறு வாக்களிக்க வேறு சில ஆப்ஷன்கள் உள்ளன. அதாவது நமது நாட்டில் நாம் வாக்குப்பதிவு நாளில் மட்டும் வாக்களிக்க முடியும். நேரில் சென்று தான் வாக்களிக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் கிட்டதட்ட எல்லா மாகாணங்களிலும் தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம். இதை early voting என்கிறார்கள். இந்த முறை சுமார் 80 லட்சம் அமெரிக்கர்கள் இப்படி முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். இது போக மெயில் மூலமாகவும் அமெரிக்கர்களால் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications