ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தொடர்பான புதிய மற்றும் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டார். ஈரானில் "மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்" என்று அவர் அறிவித்தார். மேலும், பெரும்பாலான "ஈரான் தலைவர்கள் இறந்துவிட்டனர்" என்றும், அந்நாட்டின் "கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது" என்றும் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணுசக்தி திட்டத்தை கைவிட மறுக்கிறது என்று கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியும் கொல்லப்பட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஈரான், பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலை நோக்கி கடுமையாக தாக்குதலை முன்னெடுத்தது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலக அளவில் எண்ணெய் வியாபாரம் பாதிக்கப்பட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் நடுவழியில் நிற்கின்றன.
நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஈரான் தொடர்பாக மிகப்பெரிய டிரம்ப் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டிரம்ப் இன்று தனது பேச்சில் கூறியதாவது:- ஈரானில் மகத்தான வெற்றிகள் அடைந்துள்ளோம். ஈரான் கடற்படை, விமானப்படை அழிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் அவர்களின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை. அதற்கு எங்களுக்கு அவசியமில்லை. ஹார்முஸ் வழியாக எண்ணெய் பெறும் நாடுகளே அந்த வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும். அவர்கள் அதை கட்டுப்பாட்டில் கொண்டு பாதுகாத்து மதிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications