தொட்டாலே ஷாக்கடிக்கும்.. டிரம்பை இனி நெருங்கவே முடியாது.. அமெரிக்க அதிபரின் காரின் ஸ்பெஷலே இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.இந்நிலையில் தான் அவர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத ‛தி பீஸ்ட்' காரில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். இவர் 2029 ஜனவரி மாதம் 1ம் தேதி வரை அந்த பொறுப்பில் நீடிப்பார். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அமெரிக்க அதிபர் மாளிகையில் பணியாற்றுவோரின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் இப்போது அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் அதிநவீன வசதி கொண்ட சொகுசு கார் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த கார் பல்வேறு நவீன வசதிகளுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
காரின் பெயர் ‛தி பீஸ்ட்'
இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த காருக்கு செல்லப்பெயர்கள் உள்ளன. ‛தி பீஸ்ட், கேடிலாக் ஒன், பர்ஸ்ட் கார் என்ற பெயர்களில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அமெரிக்க அதிபரின் கார் கடந்த 2018 ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வேறு கார்கள் பயன்படுத்தப்பட்டன.
ரூ.1.5 மில்லியன்
தற்போது பயன்பாட்டில் உள்ள ‛தி பீஸ்ட்' ஒரு காரின் விலை என்பது 1.5 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடியாகும். இந்த கார் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். இதற்கான செலவை பார்த்தால் அந்த காரின் மதிப்பு என்பது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு கருதி அதிநவீன வசதிகளுடன் கார் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும்.
குண்டு துளைக்க முடியாது
முழுக்க முழுக்க துண்டு துளைக்க முடியாத வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எடை என்பது என்பது 6,800-9,100 கிலோ வரை இருக்கும். 18 அடி நீளம் கொண்ட இந்த காரில் மொத்தம் 7 பேர் வரை பயணிக்கமுடியும். காரின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சாதாரண கார்களை காட்டிலும் தடிமனாக இருக்கும். அலுமினியம், ஸ்டீல் மற்றும் செராமிக் உள்ளிட்டவற்றை கொண்டு கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்தாலும் உள்ளே இருப்பவர்கள் பத்திரமாக இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கைப்பிடியில் மின்சாரம்
ஜன்னல் கண்ணாடிகள் 5 இன்ச் அளவுக்கு தடிமனாக இருக்கும். இது .44 அளவு கொண்ட புல்லட்டை கூட தடுத்து நிறுத்தும். காரின் ஒவ்வொரு கதவின் எடையும், போயிங் 757 விமானத்துடைய கதவின் எடைக்கு இணையானவை. பயங்கரவாதிகள் ரசாயன தாக்குதல்களை நடத்தினாலும் கூட, 'தி பீஸ்ட்' காரின் உள்ளே இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாது. ஒருவேளை பயங்கரவாத தாக்குதல் நடத்திவிட்டு காரின் கதவை திறந்து அதிபரை தாக்க முயன்றால் கைப்பிடியில் மின்சாரம் பாய்ச்சும் வசதி உள்ளது. அதில் 120 வொல்ட் மின்சாரத்தை பாய்ச்ச முடியும். இது கதவை திறக்க முயல்வோரை ஷாக் கொடுக்கும்.
கண்ணீர் புகை குண்டு வசதி
இந்த காரில் சேட்டிலைட் போன் வசதி உள்ளது. இந்த போன் என்பது அமெரிக்காவின் துணை அதிபர் மற்றும் பென்டகன் (அமெரிக்க பாதுகாப்பு துறை அலுவலகம்) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவசரமான சூழலில் உடனடியாக அதிபர் மெசேஜை பாஸ் செய்யும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காரில் கண்ணீர் புகை குண்டு வீசும் வசதி, பயங்கரவாதிகள் பின்தொடர்ந்தால் அவர்களின் வாகன பயணத்தை தடை செய்யும் வகையில் சாலையில் எண்ணெயை பீச்சியடிக்கும் வசதி உள்ளது. கையெறி குண்டுகள் வீசும் வசதி உள்ளிட்டவை காரில் இருக்கின்றன. நைட் விஷன் கேமரா வசதி உள்ளது.
மருத்துவ வசதி
அவசர காலத்தில் அதிபருக்கு தேவையான ரத்தம், காருக்குள் ஆக்சிஜன் வசதிகள் உள்ளிட்டவை உள்ளன. அதோடு இந்த காரை பின் தொடர்ந்து வரும் மற்ற கார்களில் அமெரிக்க அதிபருக்கான ராணுவ டாக்டர் உள்ளிட்டவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
எவ்வளவு வேகத்தில் செல்லும்?
எரிபொருள் டேங்கும் எந்த சூழலிலும் வெடிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் அதிக எடையுடன் உள்ளது. இதனால் ஒரு காலோன் (மூன்றரை லிட்டர்) எரிபொருளுக்கு வெறும் 4 மைல் என்ற அளவில் மட்டுமே மைலேஜ் தரும். அப்படிபார்த்தால் மொத்தம் மூன்றரை லிட்டர் எரிபொருள் நிரப்பினால் சுமார் 7 கிமீ மட்டுமே மைலேஜ் கொடுக்கும். இதனால் எரிபொருளுக்கு அதிக செலவு என்பது ஏற்படுகிறது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 15 வினாடிகளிலேயே இந்த கார் எட்டிவிடும்.
பஞ்சர் ஆனாலும் ஓடும்
இந்த காரின் டயர் பஞ்சர் ஆனாலும் கூட அதனை உடனடியாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது. பஞ்சர் ஆனாலும் கூட எந்தவித பிரச்சனையும் இன்றி கார் தொடர்ந்து இயங்கும் வகையில் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் வருகிறார் என்றால் அவரது ஒரு கார் மட்டும் வராது. ஒரே பதிவெண்ணில் ஒன்றுபோல் பல கார்கள் அணிவகுத்து வரும். ஒருவேளை யாராவது அமெரிக்க அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தால் அவர் எந்த காரில் இருக்கிறார்? என்பது தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்த இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
சிறப்பு டிரைவர்கள்
இந்த காரை ஓட்ட அமெரிக்கா சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை முடித்து கைதேர்ந்த பாதுகாப்பு படையை சேர்ந்தவர் தான் இந்த ‛தி பீஸ்ட்' காரில் அமெரிக்க அதிபரை வைத்து ஓட்டி செல்வார். அமெரிக்க அதிபராக இருப்பவர் எங்கு சென்றாலும் இந்த கார் சரக்கு விமானம் மூலம் அந்த நாட்டுக்கு எடுத்து செல்லப்படும். உதாரணமாக அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் இந்தியா வரும்போது அவரது காரும் விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இவ்வளவு வசதிகள் இருந்தாலும் கூட இந்த காரை அமெரிக்க அதிபர் தனது அனைத்து பயணங்களிலும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் பாதுகாப்பு காரணங்களால் இந்த காரை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் உள்ளன.
30 நிமிட பயணத்துக்கு மட்டும்
அதாவது அமெரிக்க அதிபர் இந்த காரை தனியாக ஓட்டி செல்ல அனுமதியில்லை. அதேபோல் இந்த காரில் அமெரிக்க அதிபர் 30 நிமிடம் அல்லது அதற்கு குறைவானநேரம் மட்டுமே பயணம் செய்வார். அதனை விட கூடுதல் நிமிடங்கள் பிடிக்கும் பயணம் என்றால் அவர் இந்த காரை பயன்படுத்த மாட்டார். 30 நிமிடத்துக்கு மேலான பயணத்துக்கு அமெரிக்க அதிபர் இந்த காருக்கு பதிலாக ‛ஏர் போர்ஸ் ஒன்' என்ற பெயர் கொண்ட விமானம் அல்லது ‛மரைன் ஒன் ஹெலிகாப்டரை' பயணத்துக்கு பயன்படுத்துவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications