அமெரிக்க அரசியலமைப்பிலேயே கை வைக்கும் டிரம்ப்? நிரந்தரமாக அதிபர் பதவியில் இருக்க திட்டம்?
வாஷிங்டன்: அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்தவொரு அதிபராலும் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதன்படி பார்த்தால் டிரம்பிற்கு இதுவே கடைசி அதிபர் பதவிக்காலம் ஆகும். ஆனால், எல்லாவற்றிலும் அதிரடி காட்டும் டிரம்ப், தான் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் இருக்கப் போவதாகச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
நமது ஊரில் பிரதமர், முதல்வர் உட்பட எந்தவொரு பதவியிலும் ஒருவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்.. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று எந்தவொரு விதியும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. ஒருவரால் அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும்.

மூன்றாவது முறையாக அதிபராகும் டிரம்ப்?
அதன்படி பார்த்தால் டிரம்பிற்கு இதுவே கடைசி முறை. அவர் ஏற்கனவே கடந்த 2016- 2020 வரை அதிபராக இருந்துள்ள நிலையில், இது இரண்டாவது மற்றும் கடைசி முறையாகும். அடுத்து 2028இல் நடைபெறும் அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது. ஆனால், எல்லாவற்றிலும் சர்ச்சையைக் கிளப்பும் டிரம்ப் இதிலும் தடாலடியாக ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.
அதாவது மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஒரு முறை சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், தற்போது விளக்கமாகவே இது குறித்துப் பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்துத் தான் விளையாட்டாகச் சொல்லவில்லை என்ற டிரம்ப், இது குறித்து வரும் காலத்தில் முடிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இப்போது தான் 2வது முறையாகப் பதவியேற்றுள்ளதால் இப்போதே 3வது முறை குறித்து யோசிக்க அவசரம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.
விளையாட்டுக்குச் சொல்லவில்லை
இது தொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில். "இது குறித்து நான் சும்மா விளையாட்டு சொல்லவில்லை.. அப்படி எல்லாம் நினைத்துவிடாதீர்கள். நான் 3வது முறையாக அதிபராகவும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், இப்போதே அது குறித்து யோசிக்கத் தேவையில்லை என்றே நான் சொல்கிறேன். மீண்டும் அதிபர் பதவியை ஏற்க சில வழிமுறைகள் இருக்கிறது. அதைத் தேவைப்படும் நேரத்தில் சொல்வேன்" என்றார்.
முன்னதாக டிரம்ப்பின் நீண்ட கால ஆலோசகர் ஸ்டீவ் பானன் இதற்கு முன்பே, டிரம்ப் 2028இல் மீண்டும் போட்டியிடுவார் என்று தான் நம்புவதாகக் கூறியிருந்தார். இதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க சட்டம் சொல்வது என்ன?
டிரம்ப் இந்த கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்க அரசியலமைப்பின் 22வது சட்டத் திருத்தம், ஒருவர் அமெரிக்க அதிபர் பதவியில் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது. இரண்டு முறை தொடர்ச்சியாக இருந்தாலும் சரி, இடைவெளி விட்டு இருந்தாலும் சரி அதிகபட்சம் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதை அந்நாட்டுச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
இந்தச் சட்டத்தை மாற்றினால் மட்டுமே டிரம்பால் 3வது முறையாகப் போட்டியிட முடியும். ஆனால், அங்கு ஒரு சட்டத்தை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு ஆதரவுடன் நிறைவேற வேண்டும். இரண்டிலும் டிரம்பிற்கு 3ல் 2 பங்கு ஆதரவு இல்லை என்பது தனிக்கதை.
பெரிய சிக்கல் இருக்கு
ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் மட்டும் போதாது.. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், அதில் நான்கில் மூன்று பங்கு மாகாண சட்டசபைகள், அதாவது 38 மாகாணங்களில் இந்த மசோதா நிறைவேற வேண்டும். அதன் பின்னரே சட்டம் நிறைவேறும். டிரம்பிற்கு நாடாளுமன்றத்திலும் சரி 38 மாகாணங்களிலும் சரி ஆதரவு இல்லை. எனவே, இந்த சட்டம் நிறைவேற வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்க வரலாறு
அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருந்துவிட்டு ஓய்வு பெற்றார். அதுவே பிற்காலத்தில் அமெரிக்க அதிபர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அதன் பிறகு 1940க்கு வரை இது குறித்து அங்கு எந்தவொரு சட்டமும் இல்லை என்றாலும் அனைத்து அதிபர்களும் 2 முறை மட்டுமே அதிபராக இருந்தனர். இந்த மரபை உடைத்தவர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்.
1940ஆம் ஆண்டு அதிபரான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மரபை மீறி மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார். அப்போது பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் என சர்வதேச அளவில் பதற்றம் நிலவிய சூழலில், மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார். 1945இல் தனது நான்காவது முறையாகவும் அவர் தேர்தலில் வென்றிருந்தார். அப்போது தான் அதிபர் பதவியில் இருக்கும்போது அவர் உயிரிழந்தார்.

சட்டம் சொல்வது என்ன
இருப்பினும், இதுபோல ஒருவரே தொடர்ச்சியாகப் பதவியில் இருப்பது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சிய அமெரிக்க அரசியல்வாதிகள், இதில் ஒரு செக் அண்ட் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், இதன் மூலம் அமெரிக்காவை முன்னோக்கி நகர்ந்த புதிய சிந்தனைகள் கொண்ட தலைவர் கிடைப்பார் என்றும் அவர்கள் வாதம். இதற்காகவே 1951ம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் மேற்கொண்டது. அதன்படி ஒருவரால் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.
ஆனால், இந்தச் சட்டத்தை மீறி மீண்டும் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் தொடரப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்பு இந்த விவகாரத்தில் சட்டத்தைத் தெளிவாகக் கூறுவதால் இதற்கு வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், டிரம்ப் எப்போது எதைச் செய்வார் என யாராலும் யூகிக்க முடியாது. அவர் தனது இஷ்டத்திற்குப் பல விஷயங்களைச் செய்வார்.
டிரம்பை சாதாரணமா எடுத்துக் கொள்ள முடியாது
கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் தோற்ற போது அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்தார். ஆதாரமே இல்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறிய அவர், அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் எனச் சர்ச்சையைக் கிளப்பினார். நீண்ட இழுபறிக்குப் பின்னரே விலகினார். இதனால் டிரம்ப் இப்போது 3வது முறையாக அதிபராகப் போகிறேன் என்பதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.












Click it and Unblock the Notifications