ஆரம்பமே அதிரடியில் இறங்கிய டிரம்ப்.. உள்ளே வரும் "ஐஸ் பேபி" சுசி.. வெள்ளை மாளிகை வரலாறு படைக்குதே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் தனது புதிய அரசின் முதல் நியமனத்தை மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகத் தனது பிரச்சார குழு மேலாளர் சுசி வைல்ஸை நியமித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசு கட்சியின் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார். அவர் வரும் ஜன. 20ம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
டிரம்ப்: இந்தச் சூழலில் டிரம்ப் தனது புதிய அரசின் முதல் நியமனத்தைச் செய்துள்ளார். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகச் சுசி வைல்ஸ் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த சுசி வைல்ஸ் வேறு யாரும் இல்லை.. டிரம்பின் பிரச்சார குழுவை வழிநடத்தியவர் தான். இப்போது அவரையே வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகவும் நியமித்துள்ளார் டிரம்ப்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றை அடைய எனக்குச் சுசி வைல்ஸ் உதவினார். மேலும், 2016 மற்றும் 2020 பிரச்சாரங்களிலும் முக்கிய பங்கு வகித்தார். அவர் புத்திசாலி, புதுமைகளை விரும்பக்கூடியவர்.. உலகளவில் போற்றப்படுபவர், மதிக்கப்படுபவர். அவரை இப்போது வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமிக்கிறேன். அமெரிக்க வரலாற்றில் பெண் தலைமை அதிகாரியாகச் சுசி இருப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

பாராட்டு: கடந்த இரு தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை டிரம்பின் பிரச்சாரம் சிறப்பாக இருந்ததாகப் பலரும் பாராட்டினர். தேவையற்ற பேச்சுகள் பெருவாரியாகக் குறைந்து இருந்தது. என்ன சொல்ல வேண்டும்... எப்போது சொல்ல வேண்டும்.. எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக டிரம்ப் செய்திருந்தார். இதற்குப் பிரச்சார குழு மேனேஜரான சுசி வைல்ஸ் தான் முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.
ஐஸ் பேபி: முன்னதாக டிரம்ப் தனது வெற்றி உரையிலும் சுசி வில்ஸுக்கு நன்றி கூறியிருந்தார். அப்போது டிரம்ப் கூறுகையில், "இந்த நேரத்தில் சுசிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நாங்கள் அவரை ஐஸ் பேபி என்று அழைப்போம். அவர் எப்போதும் பின்னணியில் இருந்தே செயல்பட விரும்புவார்" என்று கூறியிருந்தார். அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸும் சுசி நியமனத்தை வரவேற்றுள்ளார்.
யார் இவர்: பிரபல கால்பந்து வீரரான பாட் சம்மரலின் மகள் தான் இந்த சுசி வைல்ஸ். இவர் கடந்த 1957ம் ஆண்டு மே 14ம் தேதி பிறந்தார். புளோரிடாவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு 1980களில் ரொனால்ட் ரீகனின் பிரச்சார குழுவில் பணியாற்றி இருந்தார். மேலும், 2018ல் குடியரசுக் கட்சியின் ரான் டிசாண்டிஸ் புளோரிடாவில் போட்டியிட்ட நிலையில், அவரது பிரச்சார குழுவையும் சுசி தான் வழிநடத்தினார். அந்தத் தேர்தலிலும் டிசாண்டிஸை வெல்ல வைத்தார்.
குடியரசு கட்சியின் ஜாக் கெம்ப் மற்றும் டில்லி ஃபோலர் ஆகியோரின் பிரச்சார டீமில் வேலை செய்துள்ளார். முந்தைய தேர்தல்களில் டிரம்பின் மூத்த ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications