ஆஹா.. கமலா ஹாரிஸை காலி செய்ய இந்திய வம்சாவளி பெண்ணை இறக்கிய டிரம்ப்! இதை யாரும் எதிர்பார்க்கல
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், அங்கே கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கமலா ஹாரிஸின் ஆதரவை காலி செய்ய டிரம்ப் ஒரு மாஸ்டர் பிளானை போட்டுள்ளார். இதற்காக அவர் பிரபல இந்திய வம்சாவளி அரசியல்வாதியைத் தனது டீமில் சேர்த்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவ. மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

கமலா ஹாரிஸ் வந்தது முதலே அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. டிரம்ப் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். இதற்கிடையே கமலா ஹாரிஸை விவாதத்தில் தோற்கடிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான் ஒன்றை இறக்கியுள்ளார்.
இந்திய வம்சாவளி அரசியல்வாதி: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே அடுத்த மாதம் 10ம் தேதி விவாதம் நடக்க உள்ளது. இதில் கமலா ஹாரிஸை எதிர்கொள்ள டிரம்ப் தனது டீமில் துளசி கபார்ட் என்பவரைச் சேர்த்துள்ளார். இந்த துளசி கபார்ட் முன்பு ஜனநாயக கட்சியில் (கமலா ஹாரிஸ் இருக்கும் கட்சி) இருந்து எம்பியாக தேர்வானவர். முன்பு ஜனநாயக கட்சியில் இருந்த இவர், அதன் பிறகு இப்போது தனித்து சுயேச்சையாக இருக்கிறார்.
இவர் தான் இப்போது டிரம்ப் டீமில் சேர்ந்து இருக்கிறார். டிரம்பின் பிரைவேட் கிளப் மற்றும் இல்லமான மார்-ஏ-லாகோவில் பயிற்சி விவாதம் நடந்த நிலையில், அதில் துளசி கலந்து கொண்டு இருக்கிறார். கமலா ஹாரிஸ் உடனான விவாதத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், துளசியின் தரும் பாயிண்டுகள் விவாதத்தில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்று டிரம்ப் நினைக்கிறார்.
யார் இவர்: கடந்த 2020 அதிபர் தேர்தலில் துளசி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். இருப்பினும், உட்கட்சி தேர்தலிலேயே அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய இவர், தன்னை ஒரு டிரம்ப் ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் இவர் டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளராக இருக்கலாம் என்று கூடச் சொல்லப்பட்டது. அந்தளவுக்கு டிரம்ப் மீதான விசுவாசியாகவே கருதப்படுகிறார்.

கமலா ஹாரிஸுக்கு செக்: கடந்த 2020 அதிபர் தேர்தல் சமயத்தில் ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடந்தது. அப்போது கமலா ஹாரிஸ் மற்றும் துளசி ஒரே மேடையில் விவாதத்தில் கலந்து கொண்டனர். அப்போது துளசி கூறிய சில கருத்துகள் கமலா ஹாரிஸை திக்குமுக்காடச் செய்தது. இதன் காரணமாகவே இப்போது துளசியை டிரம்ப் மீண்டும் தனது டீமில் சேர்த்து இருக்கிறார். துளசி டிரம்பின் விவாத டீமில் இருப்பதை டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் உறுதி செய்துள்ளார். இது கமலா ஹாரிஸுக்கு பெரிய செக்காக இருக்கும்.
ஏன் முக்கியம்: அமெரிக்காவைப் பொறுத்தவரை விவாதங்கள் ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும். கடந்த ஜூன் மாதம் டிரம்ப்- பைடன் இடையே விவாதம் நடந்தது. அதில் பைடன் மிக மோசமாகச் செயல்பட்டார். அதன் பிறகே பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற அழுத்தம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அதிபர் ரேஸில் இருந்தே விலக வேண்டி இருந்தது. இதன் காரணமாகவே அடுத்த மாதம் நடக்கும் கமலா ஹாரிஸ்- டிரம்ப் விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.
பைடனை போலவே கமலா ஹாரிஸையும் விவாதத்தில் காலி செய்ய வேண்டும் என்பதே டிரம்பின் திட்டமாக இருக்கிறது. குறிப்பாகக் கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவரே இல்லை அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற சர்ச்சை டிரம்ப் கிளப்பி இருக்கிறார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்திலும் கமலா ஹாரிஸின் நிலைப்பாடுகளை வைத்து டிரம்ப் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications