இந்தியா வர பிளான் போடும் டொனால்ட் டிரம்ப்.. எப்போது தெரியுமா? அமெரிக்க அதிபரே சொன்ன தகவல்
வாஷிங்டன்: ‛‛பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகளவில் நிறுத்தி உள்ளார். அவர் என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் பேசுகிறோம். பிரதமர் மோடி பெரிய மனிதர். இந்தியாவுக்கு நான் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் செல்வேன்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் டிரம்ப் இந்தியாவுக்கு எப்போது வர திட்டமிட்டு வருகிறார் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு நம் நாடு செவிசாய்க்காமல் இருந்த நிலையில் தற்போது ஓரளவு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் தொடர்பான ஒப்பந்தத்தை நிறத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛அவர் (பிரதமர் மோடி) ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகளவில் நிறுத்தி உள்ளார். அவர் என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் பேசுகிறோம். பிரதமர் மோடி பெரிய மனிதர். இந்தியாவுக்கு நான் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நான் செல்வேன்'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு செல்வீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛இருக்கலாம்.. ஆமாம்'' என்று பதிலளித்தார். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் அளித்த பேட்டியில், ‛‛இந்தியா உடனான உறவை ஆழப்படுத்த டிரம்ப் விரும்புகிறார். ஏனென்றால் அமெரிக்காவுக்கான முக்கியமான பார்ட்டனராக இந்தியா உள்ளது. இந்தியா - அமெரிக்கா உறவு பற்றி டிரம்ப் பாசிட்டிவ் எண்ணம் வைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடியுடன் பேசினார். ஓவல் அலுவலகத்தில் இந்தியாவின் உயரதிகாரிகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார்'' என்று கூறியிருந்தார்.
இதன் அடுத்தக்கட்டமாக தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் அடுத்த ஆண்டு நம் நாட்டுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தற்போதைய சூழலில் சீனாவிடம் நம் நாடு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதனை டிரம்ப் விரும்பவில்லை. இதனால் விரைவில் அவர் நம் நாட்டுக்கு வந்து சீர்குலைந்த உறவை மீட்டெடுக்க முயற்சிப்பார் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications