அமெரிக்காவுடன் ஐக்கியமாகும் கனடா? டிரம்ப் தடாலடி பேச்சு.. ஒரு நொடி ஆடிப்போன பிரதமர் ட்ரூடோ!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை கடந்த வாரம் தான் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்திருந்தார். கனடாவுக்குக் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அது தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளனர். அப்போது ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா மாறக்கூடும் என்று டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், அடுத்த மாதம் தான் பதவியேற்கப் போகிறார். அதற்கு முன்பு இப்போது அவர் தனது நிர்வாகத்தில் இடம்பெறும் அமைச்சர்களைத் தேர்வு செய்து வருகிறார். இடையில் சர்வதேச தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

அதேநேரம் டிரம்ப் சர்ச்சைக்குப் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும். பல நேரங்களில் அவர் சொல்லும் கருத்துகள் மிகப் பெரிய விவாதமாக மாறும். அதுபோலத் தான் இப்போது நடந்துள்ளது. ஆனால், அது சர்வதேச அரசியல் தொடர்பானதாகும்.
ஷாக்: அதாவது டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார். அப்போது அமெரிக்காவின் 51வது மாகாணமாகக் கனடா மாறக்கூடும் என்று டிரம்ப் கூறியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் தான் கனடா மீது கூடுதல் வரி விதிக்கப் போகிறேன் என டிரம்ப் கூறியிருந்தார். அது சர்ச்சையாகியிருந்த நிலையில், டிரம்பை நேரில் சென்று ட்ருடோ சந்தித்தார். அப்போது தான் டிரம்ப் இதைக் கூறியிருக்கிறார்.
அதாவது கனடா நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிறையப் பேர் அமெரிக்காவுக்குள் வருவதாக டிரம்ப் கடந்த வாரம் குற்றஞ்சாட்டினார். மேலும், கனடாவில் இருந்து அதிகளவில் போதைப்பொருளும் வருவதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், இதற்காகக் கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு 25% வரி விதிக்கப் போவதாகக் கூறியிருந்தார். டிரம்பின் இந்த பேச்சைத் தொடர்ந்தே அவரை ட்ருடோ நேரில் சந்தித்தார்.
இணையலாம்: டிர்மபின் புளோரிடா ரிசார்ட்டில் நடந்த இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது தங்கள் நாட்டின் மீது 25% வரி விதித்தால் அது கனடா நாட்டின் பொருளாதாரத்தையே மொத்தமாகச் சீர்குலைத்துவிடும் என்று டிரம்பிடம் ட்ரூடோ கூறியதாகத் தெரிகிறது. அதற்கு டிரம்ப், "பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியதற்காகவே இந்த வரியை விதிக்கப் போகிறேன் எனச் சொல்கிறேன். ஒருவேளை அந்த வரி கனடாவின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தால், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாகக் கனடா தாராளமாக இணையலாம்" என்றார்.
ஸ்டன் ஆன அதிகாரிகள்: மேலும், அப்போது அமெரிக்காவிடம் இருந்து 100 மில்லின் டாலரை பிடுங்காமல் கனடாவில் இருக்க முடியாதா என்றும் டிரம்ப் கேட்டதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் இதுபோல கூறியதைக் கேட்டு அங்கிருந்த கனடா அதிகாரிகளுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லையாம். கனடா அதிகாரிகள் ஒருவாறு சிரித்துக் கொண்டே சமாளித்ததாகக் கூறப்படுகிறது.
நெட்டிசன்கள்: வழக்கம் போல டிரம்பின் இந்த பேச்சுக்கு அவரது பாலோயர்ஸ் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதுபோல இருந்தால் மட்டுமே அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியும் என அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதேநேரம் கனடாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்பின் பேச்சுக்கு ட்ரூடோ பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் என்றும் அவர் அமைதியாக இருந்ததை ஏற்க முடியாது என்றும் கனடா நாட்டவர் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications