அமெரிக்க அதிபரின் சம்பளம் இவ்வளவு கம்மியா.! பதவியேற்ற பிறகு டிரம்பிற்கு கிடைக்கும் சலுகைகள் என்ன!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான டிரம்ப் அதிபராக இருக்கும் போது அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்.. அவருக்கு வேறு என்னென்ன வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் இன்று அந்நாட்டின் 47ஆவது அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் பதவியேற்பு:
அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு அதிபர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதாவது இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு டிரம்ப் அதிபராகப் பதவியேற்கிறார். சரி, இன்று அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கப் போகும் டிரம்ப் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு! அவருக்கான சலுகைகள் என்னென்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டிரம்ப் சம்பளம்:
கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கு ஆண்டு சம்பளமாக 4,00,000 லட்சம் டாலர் வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அமெரிக்க அதிபரின் சம்பளம் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. 4 லட்ச டாலர் என்பது இந்திய மதிப்பில் 3.46 கோடி ரூபாயாகும். அதன்படி பார்க்கும் போது டிரம்பிற்கு மாதம் இந்திய மதிப்பில் ரூ.28.383 லட்சம் சம்பளமாகக் கிடைக்கும். இதற்கு முன்பு 1969 முதல் 2001 வரை அதிபரின் ஊதியம் ஆண்டுக்கு 2 லட்சம் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப கம்மி:
இது பெரிய தொகை போலத் தெரிந்தாலும் கூட உண்மையில் அமெரிக்காவின் டாப் ஒரு சதவிகித பணக்காரர்களின் ஆண்டு வருமானத்தை விடக் குறைவாகும். அங்கு டாப் ஒரு சதவிகித பணக்காரர்கள் ஆண்டுக்கு 7.88 லட்சம் டாலர் சம்பாதிக்கும் சூழலில், அதை விட டிரம்ப் சம்பளம் கம்மியாகவே இருக்கிறது. மேலும், ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் உலகின் மற்றொரு முக்கிய நாடான சிங்கப்பூரில் பிரதமரின் ஆண்டு சம்பளம் 1.6 மில்லியன் டாலராக இருக்கும் நிலையில், அதை விட அமெரிக்க அதிபரின் சம்பளம் கம்மிதான்.
சம்பளம் ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி வெள்ளை மாளிகையில் வாழ்வது, ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் மற்றும் மரைன் ஒன் ஹெலிகாப்டரில் பயணிப்பது, 24 மணி நேர சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வசதிகள் அமெரிக்க அதிபருக்குக் கிடைக்கும். இதையெல்லாம் சேர்த்தால் டிரம்பின் ஒட்டுமொத்த சம்பளம் 5.69 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 4.92 கோடி ரூபாய்) இருக்கும்.
இதர அலவன்ஸ்கள்:
டிரம்பிற்கு சம்பளத்தில் பல அலவன்ஸ்கள் உள்ளிட்ட இதர நன்மைகளும் கிடைக்கும். முதலில் டிராவல் அலவன்ஸ். அமெரிக்க அதிபரின் தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ பயண செலவுகளுக்கு 50,000 டாலர் ஒதுக்கப்படும். இது தவிரப் பயணம் மற்றும் பொழுதுபோக்கு அலவன்ஸாக முறையே ஒரு லட்ச டாலரும் 19,000 டாலரும் ஒதுக்கப்படும். மேலும், புதிதாக அதிபராகப் பதவியேற்கும் நபர் தனக்கேற்ப வெள்ளை மாளிகையை மறுவடிவமைப்பு செய்து கொள்ள ஒரு லட்ச டாலர் வழங்கப்படும். இதையெல்லாம் சேர்க்கும் போது தான் டிரம்பின் சம்பளம் 5.69 லட்சம் டாலராக இருக்கிறது.
சம்பளத்தைத் தாண்டி வேறு சில நன்மைகளும் கூட கிடைக்கும். அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் நபர் குடும்பத்துடன் வெள்ளை மாளிகையில் தங்குவார். இதற்கு வேறு எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மேலும் ஏர்ஃபோர்ஸ் ஒன், மரைன் ஒன் உட்பட விமானங்களை இலவசமாகப் பயன்படுத்தலாம். இது தவிர அமெரிக்க அதிபருக்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்படும். மேலும், விரிவான மருத்துவ காப்பீடும் கூட அவருக்கு வழங்கப்படும்.
மாஜி அதிபர்கள்
நமது நாட்டில் முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எப்படி ஓய்வூதியம் வழங்கப்படுமோ.. அதேபோல அமெரிக்காவிலும் மாஜி அதிபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி முன்னாள் அதிபருக்கு ஆண்டுக்கு சுமார் $230,000 ஓய்வூதியம் (சுமார் ரூ.2 கோடி) கிடைக்கும். இது தவிர விரிவான மருத்துவ காப்பீடு, அலுவலக இடம், ஊழியர்களுக்கான வாடகை ஆகியவை கிடைக்கும். இது போக டிராவல் அலவன்ஸ் உள்ளிட்டவையும் அவருக்குக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications