"எனது மகன் இறந்துவிட்டான்.." பேச முடியாமல் திணறிய எலான் மஸ்க்.. இந்தளவுக்கு எமோஷ்னலாக என்ன காரணம்!
வாஷிங்டன்: தனது பிள்ளைகளில் ஒருவர் 18 வயதாகும் முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய எலான் மஸ்க், தன்னை ஏமாற்றி இதற்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்து வாங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட எலான் மஸ்க், தனது மகன் உயிரிழந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் என்று பல்வேறு நிறுவனங்களை இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

எலான் மஸ்க்: இதற்கிடையே சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் எலான் மஸ்க் தனது குழந்தைகள் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தனது குழந்தைகளில் ஒருவர் குறித்துப் பேசும் மோது திடீரென எமோஷ்னல் ஆனார். வழக்கமாக எந்த கேள்வி கேட்டாலும் சட்டெனப் பதிலளிக்கும் எலான் மஸ்க். இந்த கேள்விக்கு மட்டும் நீண்ட கேப் விட்டே பதில் அளித்தார். தனது மகன் woke mind வைரஸால் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்
இந்த woke mind virus என்பது உண்மையான வைரஸ் இல்லை. பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை எதிர்க்கும் அடிப்படைவாதிகள், அதை woke mind வைரஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவே தனது மகன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த எலான் மஸ்க், அந்த வைரஸை நிச்சயம் உலகில் இருந்து அழித்தொழிப்பேன் என்றும் உறுதியளித்தார்.
இறந்துவிட்டார்: இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த எலான் மஸ்க், "இது எனது மூத்த மகன்களில் ஒருவருக்கு நடந்தது.. சேவியருக்கான ஆப்ரேஷன் ஆவணங்களில் என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டனர். எனது மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இது கொரோனா காலாட்டம்.. இதனால் நிறையக் குழப்பம் இருந்தது.. நான் இதில் கையெழுத்துப் போடவில்லை என்றால் சேவியர் தற்கொலை செய்து கொள்வான் எனச் சொல்லி கையெழுத்து வாங்கினார்கள்.
இந்த விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மோசமானது.. கொடியது.. தீயது.. இதை ஊக்குவிக்கும் அனைத்து நபர்களும் சிறைக்குச் செல்ல வேண்டும்.. அவை எல்லாம் கருத்தடை செய்யும் மருந்துகள் என்பதைக் கூட எனக்குச் சொல்லவில்லை. இதனால் நான் என் மகனை இழந்தேன்.. அதுதான் உண்மை.
காரணம் என்ன: என் மகன் சேவியர் இறந்துவிட்டான்.. woke mind virus காரணமாகவே எனது மகன் உயிரிழந்துள்ளான்" என்று கூறிய அவர் அடுத்துப் பேச முடியாமல் திக்கித் திணறிப் போனார். நீண்ட கேப் விட்ட அவர், "இந்த woke mindஐ எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என அப்போது தான் முடிவு செய்தேன்" என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளிடையே பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுவது குறித்த கேள்விக்குத் தான் எலான் மஸ்க் இந்த பதிலை அளித்தார்.
பின்னணி: எலான் மஸ்க் தனது மூத்த மகன்களில் ஒருவரான விவியன் ஜென்னா வில்சன் குறித்துப் பேசும் போதே இதை எல்லாம் எலான் மஸ்க் கூறினார். எலான் மஸ்க்கிற்கும் அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க்கிற்கும் கடந்த 2004இல் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் தான் இந்த விவியன் ஜென்னா வில்சன். இவரது உண்மையான பெயர் சேவியர் மஸ்க்.
இருப்பினும், கடந்த 2022இல் தன்னை திருநங்கையாக அறிவித்த அவர், தனது பெயரையும் விவியன் ஜென்னா வில்சன் என மாற்றினார். மேலும், தந்தையுடன் எந்த விதத்திலும் தொடர்புப்படுத்த விரும்பவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications