“சென்னையில் H-1B விசா விண்ணப்பங்களில் மோசடி.. தகுதியானவர்களே இங்கு இல்லை!” - இந்திய வம்சாவளி அதிகாரி
வாஷிங்டன்: "நான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியபோது H-1B விசா விண்ணப்பங்களில் ஏராளமான மோசடி நடந்தது. உண்மையில் தகுதியில்லாதவர்கள் பலர் மோசடியாக விண்ணப்பித்திருந்தனர்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மவ்வாஷ் சித்திக் விமர்சித்திருக்கிறார்.
H-1B விசா நடைமுறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயரும் மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வர, H-1B விசாவில் மோசடி செய்யப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியும் இந்திய வம்சாவளியுமான சித்திக் விமர்சித்திருக்கிறார்.

போலி விண்ணப்பங்கள்
Parsing immigration policy என்கிற பாட்காஸ்ட்டில் பேசிய இவர், இந்த விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். கடந்த 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தான் பணியாற்றியதாகவும், அங்கு H-1B விசா விண்ணப்பங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் கூறிய சித்திக், இந்த விசா விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள பல்வேறு தகவல்கள் போலியானவாயாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
போலி டிகிரி
அவர் பேசியதாவது, "நான் சென்னையில் பணியில் இருந்தபோது சுமார் 51,000 H-1B விசா விண்ணப்பகளை பரிசீலனை செய்தேன். விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவையா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வில் 80 முதல் 90 சதவீதமான விண்ணப்பங்களில் போலியான தகவல்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த விசா விண்ணப்பங்களில் போலி டிகிரி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான விசா விண்ணப்பங்கள் இந்த நிலைமையில்தான் இருக்கின்றன.
விசாரணை
அவர்கள் H-1B விசா அளவுக்கு தகுதியான, திறமையானவர்கள் அல்ல. அமெரிக்காவுக்கு ஸ்டெம் துறையில், திறமை பற்றாக்குறை உள்ளது என்றும் அதை இந்தியாவிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வாதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், இப்படியான வாதங்கள் கட்டுக் கதைகள்.
விண்ணப்பங்களில் போலியான தகவல்கள் குறிப்பிடப்பட்டது குறித்தும் போலிச் சான்றிதழ்கள் குறித்தும் விசாரித்த போது பல தகவல்கள் வெளியாகின. நாங்கள் ஹைதராபாத். கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் விசாரித்தோம். இதில் ஹைதராபாத்தில் அமிர்பேட் பகுதியில் உள்ள கடைகள் விசா ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், போலி கல்வி சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் உட்பட்ட ஆவணங்களையும் தயாரித்து வழங்குகின்றன.
அரசியல் அழுத்தம்
விசா விண்ணப்பங்கள் தொடர்பாக நேர்காணல்கள் நடக்கும். நேர்காணல் செய்பவர் அமெரிக்காவில் இருந்து வீடியோ கால் மூலம் அழைப்புகளை மேற்கொண்டால், விண்ணப்பதாரருக்கு பதிலாக மற்றொருவர் அந்த நேர்காணலில் பங்கேற்பார். அதேபோல இந்திய மேனேஜர்கள் சக இந்தியர்களுக்கு வேலை வழங்கும் போது, அவர்களின் சம்பளத்தில் ஒரு மாத ஊதியத்தை பிடித்துக் கொள்வார்கள். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே வேலை உறுதி செய்யப்படும்.
இந்த மோசடியை கண்டுபிடித்து நாங்கள் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினோம். ஆனால் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் இதற்கு எதிராக இருந்தன. நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்திய போது, பல அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தோம். எனவே விசாரணையை தொடர வேண்டாம் என்று எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது" என்று கூறியிருக்கிறார். இவரது கருத்து விவாதங்கை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications