வெடித்து சிதறி உயிரைப் பறிக்கத் துடித்த டூத் பிரஷ்! பாத்ரூமில் நடந்த பகீர் விபத்து!
வாஷிங்டன்: அன்றைய இரவு 33 வயதான ஷார்லோட் போவர்ஸுக்கும் (Charlotte Bowers) அவரது வாழ்க்கைத்துணைக்கும் ஒரு சாதாரண இரவாகவே இருந்தது. நியூயார்க்கின் பரபரப்பான வாழ்க்கைக்குப் பின், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர்கள், சில மணி நேரங்களில் தங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த 'எலக்ட்ரிக் டூத்பிரஷ்' (Electric Toothbrush) ஒரு வெடிகுண்டாக மாறும் என்று யார் அறிவார்?
மொபைல் போன் வெடித்தது, கார் தீப்பற்றியது, பைக் பேட்டரி வெடித்தது போன்ற செய்திகளைத் தாண்டி, இப்போது நம் படுக்கையறை மற்றும் குளியலறைக்குள் நுழைந்துவிட்டன இந்த 'ஸ்மார்ட்' ஆபத்துகள்.

என்ன நடந்தது அந்த இரவில்?
எட்டு மாதங்களாகப் பயன்படுத்தி வந்த அதே டூத்பிரஷ் தான் அது. வழக்கம்போல குளியலறையின் கண்ணாடி ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்தது. ஷார்லோட் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக அன்று அந்த பிரஷ் சார்ஜிங்கில் இல்லை. எப்போதும் உலர்ந்த நிலையில் (Dry) வைத்திருப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்" என்கிறார்.
நள்ளிரவில் அந்த பிரஷ் திடீரென வெடித்துச் சிதறியிருக்கிறது. அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் குளியலறையின் சுவர்களைக் கருமையாக்கின. மேலேயிருந்த எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhauster Fan) உருகத் தொடங்கியது. வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த பிரஷ் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஸ்டாண்டின் ஸ்டீல் ஃபிரேம், தீப்பிழம்புகள் மற்ற இடங்களுக்குப் பரவாமல் ஒரு தடையரணாக நின்றது.
"அந்த கண்ணாடி மட்டும் இல்லையென்றால், இன்று நானும் என் துணையும் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். காலையில் எழுந்து பாத்ரூம் சென்றபோது நான் கண்ட காட்சி என்னை ஒரு வாரம் அதிர்ச்சியில் உறைய வைத்தது" என பீதியுடன் பகிர்கிறார் ஷார்லோட்.
நிறுவனத்தின் அலட்சியமும், நியாயமான கோரிக்கையும்
இந்த விபத்தினால் ஷார்லோட்டின் குளியலறை முழுவதும் கரும்புகையினால் சேதமடைந்தது. அந்த வாடையைப் போக்க ஸ்பெஷல் பெயிண்ட் அடிக்கவே சுமார் 267 டாலர் (சுமார் ₹22,000) செலவானது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த இழப்பீட்டைத் தர மறுத்து, வெறும் 46 டாலர் (புதிய பிரஷ் வாங்குவதற்கானத் தொகை) மட்டும் தருவதாகக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
"நான் ஆயிரக்கணக்கில் நஷ்டஈடு கேட்கவில்லை. நடந்த விபத்திற்கு அவர்கள் பொறுப்பேற்று, எனது சேதமடைந்த சுவரைச் சரிசெய்யும் தொகையைத் தந்தால் போதும். ஆனால், மனித உயிருக்கு அந்த நிறுவனம் தரும் மதிப்பு இவ்வளவுதானா?" என்பதுதான் ஷார்லோட்டின் தார்மீகக் கேள்வி.
எலக்ட்ரிக் டூத்பிரஷ்கள் ஏன் வெடிக்கின்றன?
எலக்ட்ரிக் டூத்பிரஷ்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைதான் இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகின்றன:
- ஈரப்பதம் கசிதல்: குளியலறையில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். பிரஷின் அடிப்பகுதியில் இருக்கும் சீல் (Seal) சேதமடைந்தால், உள்ளே தண்ணீர் சென்று ஷார்ட் சர்க்யூட் (Short Circuit) ஏற்படலாம்.
- தரமற்ற பேட்டரிகள்: மலிவான அல்லது போலி பிராண்டுகளைப் பயன்படுத்தும்போது, பேட்டரியின் தரம் குறைவாக இருக்கும்.
- அதிகப்படியான வெப்பம்: சார்ஜிங்கில் நீண்ட நேரம் விடுவது அல்லது வெப்பமான சூழல் பேட்டரியை வீங்கச் செய்து வெடிக்க வைக்கும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி? சில ஆலோசனைகள்
நவீன காலத்தில் மின்சாதனங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், எச்சரிக்கையுடன் செயல்படலாம்:
- சார்ஜிங் நேரம்: பிரஷ் முழுமையாக சார்ஜ் ஆனவுடன் பிளக்கை அகற்றிவிடவும். இரவு முழுவதும் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும்.
- பராமரிப்பு: பயன்பாட்டிற்குப் பிறகு பிரஷின் அடிப்பகுதியை நன்கு துடைத்து உலர வைக்கவும்.
- மாற்ற வேண்டிய நேரம்: பிரஷ் கவிழ்ந்து விழுந்தாலோ அல்லது அதன் பிளாஸ்டிக் பகுதியில் விரிசல் ஏற்பட்டாலோ, உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடவும்.
- அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகள்: ஐஎஸ்ஐ (ISI) அல்லது சர்வதேச பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கவும்.
உயிரா? சௌகரியமா?
"இனி என் வாழ்நாளில் எலக்ட்ரிக் டூத்பிரஷ் பக்கமே போகமாட்டேன்" என்று ஷார்லோட் எடுத்த முடிவு உணர்ச்சிகரமானது என்றாலும், அது நமக்கான ஒரு எச்சரிக்கை மணி. நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மின்சாதனமும் ஒரு சிறிய ஆற்றல் சேமிப்புக் கிடங்குதான். அது எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக மாறலாம்.
தொழில்நுட்பம் நம் வேலையை எளிதாக்க வேண்டுமே தவிர, உயிரைப் பறிப்பதாக இருக்கக்கூடாது. இனி உங்கள் குளியலறையில் இருக்கும் டூத்பிரஷ்ஷையும் ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள்!












Click it and Unblock the Notifications