அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் பிரபல யூடியூபர்.. ஆனா ஒரே ஒரு பிரச்சினை இருக்கு! ஆஹா ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பைடன், டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளதாகப் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கு ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

யூடியூபர்: இருவரும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸ் பரபரப்பாகச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பிரபல யூடியூபர் ஒருவரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒற்றை வரியில் போட்ட ட்வீட் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
யார்: மிஸ்டர் பீஸ்ட் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜேம்ஸ் எஸ் டொனால்ட்சன் என்பவர் தான் இந்த ட்வீட்டை போட்டுள்ளார். யூடியூப்பில் இருக்கும் பெரும்பாலானோருக்கு இந்த மிஸ்டர் பீஸ்ட் குறித்துத் தெரிந்து இருக்கும். இப்போது உலகிலேயே அதிக சப்ஸ்கிரைபர்கள், அதாவது 300 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேனலாக இவரது மிஸ்டர் பீஸ்ட் சேனல் தான் இருக்கிறது.
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்புடம் இவர் தனக்கு யூடியூப்பில் கிடைக்கும் வருமானத்தை வைத்துப் பல நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். ஆப்பிரிக்காவில் 100 இடங்களில் போர் போட்டு, அப்பகுதி மக்களுக்குக் குடிநீர் இணைப்பை வழங்கியவர். அதேபோல இவர் கடந்த ஜூன் 29ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் எல் சால்வடார் மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் 100 வீடுகளை இலவசமாகக் கட்டிக் கொடுத்திருந்தார். இதுபோல அவர் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
சிக்கல்: இந்த வீடியோவுக்கு கீழ் ஒருவர் "மிஸ்டர் பீஸ்ட் ஃபார் அதிபர்" என்று கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டுக்கு சுமார் 2.42 லட்சம் பேர் லைக் போட்ட நிலையில், இது தொடர்பாக மிஸ்டர் மீஸ்டும் கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிபர் தேர்தலில் போட்டியிடும் வயதைக் குறைத்தால் நானும் களத்தில் குதிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிட ஒருவருக்குக் குறைந்தபட்சம் 35 வயதாகி இருக்க வேண்டும். இதன் காரணமாகவே 26 வயதே ஆன மிஸ்டர் பீஸ்ட் விரும்பினாலும் இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் அதிபர் ரேஸில் களமிறங்க இன்னும் 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அமெரிக்க வரலாற்றில் இளம் வயது அதிபர் என்ற பெருமை தியோடர் ரூஸ்வெல்ட் என்பவரிடம் தான் உள்ளது. அவர் அதிபராகும் போது அவருக்கு வயது வெறும் 42 ஆகும்.
வேறு கண்டிஷன்கள்: அமெரிக்காவில் ஒருவர் அதிபராக வேண்டும் என்றால் அவருக்கு வேறு சில கண்டிஷன்களும் இருக்கிறது. அதாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அமெரிக்கக் குடியுரிமை வைத்திருக்க வேண்டும். அவர் நிச்சயம் அமெரிக்காவில் பிறந்து இருக்க வேண்டும். அதேபோல கடைசி 14 ஆண்டுகள் அவர்கள் அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயதாகியிருக்க வேண்டும். இதில் மற்ற கண்டிஷன்களில் மிஸ்டர் மீஸ்ட் பாஸ் ஆனாலும், வயது மட்டும் அவருக்குச் சிக்கலாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications