சீட் பிடிப்பதில் மோதல்.. நடு வானில் பாக்சிங் செய்த விமான பயணிகள்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
வாஷிங்டன்: பஸ்கள் மற்றும் ரயில்களில் இருக்கைக்காக பயணிகள் சண்டையிட்டு கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் விமானத்திலும் இதுபோன்று இருக்கைக்காக பயணிகள் இருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பஸ்களில் சீட் பிடிக்க பயணிகளுக்கு இடையே சில நேரங்களில் கடும் போட்டி காணப்படும். இந்த போட்டி வாக்குவாதமாக மாறி கைகலப்பில் கூட போய் முடியும். தொலைதூர பயணம் செல்லும் பேருந்துகளில் கூட்ட நெரிசலான நாட்களில் இத்தகைய காட்சிகளை அடிக்கடி பார்க்க முடியும்.

இதேபோல ரயில்களில் கூட முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகளுக்கு இடையே சீட் பிடிக்க நடக்கும். முன்பதிவு பெட்டியில் கூட சில நேரங்களில் சீட் விவகாரத்தில் பயணிகள் ஒருவருக்கொருவர் மல்லு கட்டுவதை பார்க்க முடியும். ஆனால், விமானத்தில் அதுவும் நடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது, சீட்டிற்காக பயணிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்ட வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
தைவான் சென்ற விமானம்: இது குறித்த விவரம் வருமாறு:- தைவானில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு EVA ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கிட்டதட்ட 11.5 மணி நேரம் செல்லும் இந்த விமானம் முழுவதும் பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, ஒரு பயணி அடிக்கடி இருமிக் கொண்டு இருந்துள்ளார்.
இருக்கைக்கு சண்டை: இதனால், இந்த சீட்டில் இருந்து எப்படியாவது வேறு சீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று பக்கத்து சீட்டில் இருந்த பயணி கருதியுள்ளார். ஆனால், வேறு எங்கும் சீட் இல்லை.. அனைத்து இருக்கையிலும் பயணிகள் இருந்தனர். இதனால், என்ன செய்வதென்று கருதிய அந்த நபர் யோசித்துக் கொண்டு இருந்த போது முன் இருக்கையில் இருந்த ஒரு பயணி எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றார்.
உச்சக்கட்ட மோதல்: இதுதான் சமயம் என்று அந்த பயணியின் இருக்கையில் போய், இவர் அமர்ந்து விட்டார். ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு திரும்பி வந்த பயணி, தனது இருக்கையில் மற்றொரு நபர் இருப்பதை பார்த்ததும் ஆத்திரத்தில் அவரை அடித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த பயணி திருப்பி தாக்க நடு வானில் உச்ச கட்ட மோதல் நடைபெற்றது.
விமானத்தில் இருக்கைக்கு பயணிகள் இருவர் அடித்துக் கொள்வதை பார்த்ததும் ஓடி வந்த விமான சிப்பந்திகள் இருவரையும் பிரித்து விட முயன்றனர். ஆனால், அவர்கள் சண்டை ஓய்ந்தபாடில்லை. .ஒருவழியாக சில நிமிட போராட்டத்திற்கு பிறகு சண்டையை விலக்கி விட்டனர். ஆனாலும் ஒருவருக்கொருவர் சத்தமாக வாக்குவாதம் செய்து கொண்டனர்.
சிப்பந்திகளுக்கு பாராட்டு: இதனால், பெரும் போராட்டத்திற்கு பிறகு இரு பயணிகளையும் விமான சிப்பந்திகள் மற்றும் சக பயணிகள் சேர்ந்து அமைதிப்படுத்தினர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு பயணிகள் சண்டையிட்ட காட்சிகளை சக பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சண்டையை விலக்கி விட்ட விமான சிப்பந்திகளுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து: நெட்டிசன் ஒருவர் கூறுகையில், விமானத்தில் சக பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் விதமாக நடந்து கொண்ட இந்த பயணிகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இரு பயணிகளும் விமான நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் விமான நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications