டிரம்பின் இந்திய வரி! அமெரிக்காவுக்கு தான் ரொம்ப பெரிய ஆபத்து.! மிக கடுமையாக விமர்சித்த மாஜி ஆலோசகர்
வாஷிங்டன்: டிரம்ப் இந்தியா மீது வரி விதித்துள்ள நிலையில், அதைப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே மாஜி அதிபர் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்த வரிகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த வரிகள் அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் இது அமெரிக்காவுக்கே எதிராகத் திரும்பும் என்றும் அவர் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில காலமாகவே பல்வேறு நாடுகள் மீதும் வரிகளை அள்ளி வீசி வருகிறார். அப்படித் தான் சமீபத்தில் இந்தியா மீது அவர் 50% வரிகளை விதித்திருந்தார். இது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இரு நாட்டு வர்த்தகம் மொத்தமாக முடங்கும் என அஞ்சப்படுகிறது.

கடும் தாக்கு
இதற்கிடையே அமெரிக்க மாஜி அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். டிரம்ப் வரிகளே சீனாவுக்குச் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றுத் தருவதாகவும் அவர் விமர்சித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உலக அளவில் அமெரிக்காவின் நற்பெயர் தரைமட்டத்திற்குச் சென்றுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு இப்படி இல்லை. தற்போது உலகளவில் சீனாதான் பொறுப்பான நாடாகத் தெரிகிறது.
கழிப்பறைக்கே போய்விட்டது
உலக அரங்கில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவை விடப் பல நாடுகளில் சீனா அதிகச் செல்வாக்கு பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நிலை இல்லை. தற்போது பல நாடுகள் அமெரிக்கா மீது அவநம்பிக்கை கொண்டுள்ளன. அமெரிக்கா என்ற நாட்டின் பிம்பம் கழிப்பறைக்கே போய்விட்டது. அதேநேரம், சீனா ஒரு பொறுப்பான உலக நாடாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் வரிகளை நாம் சாதாரணமாகக் கருத முடியாது. இது இந்தியாவையும் சீனாவையும் ஒரே அணியில் கொண்டு வருகிறது.. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த நாங்கள் பாடுபட்டோம். ஆனால் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது வர்த்தகப் போரைத் தொடங்கியது. இதனால் இந்தியா சீனா நெருக்கமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நட்பு நாடுகள்
டிரம்ப் எடுக்கும் இந்த நடவடிக்கைகளால் நட்பு நாடுகள் இப்போது அமெரிக்காவை ஒரு பெரிய குழப்பவாதி நாடு எனப் பார்க்க ஆரம்பித்துள்ளன. உலகத் தலைவர்கள் அமெரிக்காவை ஆபத்தாகவும் அந்த ஆபத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தளவுக்கு நிலைமை மோசமாகக் கையை மீறிச் சென்றுவிட்டது" என்றார்.
இந்தியா சீனா உறவு
கடந்த சில மாதங்களாக இந்தியா சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. 2020ல் கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், டிரம்ப் வரியால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியா சீனா இடையே இப்போது பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் முடிவுக்கு வருகிறது. இதைத்தான் ஜேக் சல்லிவான் குறிப்பிடுகிறார்.
அதேநேரம் இந்தியா மீதான வரிகளை அமெரிக்க முன்னாள் டாப் அதிகாரிகள் பலரும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, டிரம்பின் மாஜி உதவியாளர் ஜான் போல்டன், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் கிறிஸ்டோபர் படில்லா, பிரபல அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் என்று பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.












Click it and Unblock the Notifications