சுடு தண்ணில கைய விட்ட மாதிரி.. சும்மா விடாது ‘காட்ஸில்லா’ எல் நினோ! 2027 சும்மா கருக வைக்கப் போகுது!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் இருக்கும் வானிலை ஆய்வாளர்களின் கவனம் தற்போது பசிபிக் பெருங்கடலை நோக்கி திரும்பி இருக்கிறது. 2026 ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ நிகழ்வு இதற்கு முன்பு பதிவான மிகப்பெரிய எல் நினோ நிகழ்வுகளை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். மேலும் இதனை கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத 'காட்ஸில்லா எல் நினோ' என்றும் அதனை குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக மதியம் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் நிகழ்வு எல் நினோ எனப்படுகிறது. இது ஒரு இயற்கையான காலநிலை சுழற்சி என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே வெப்பநிலை உலகம் முழுவதும் உயர்ந்து வரும் நிலையில் இந்த கடல் வெப்பநிலை உயர்வு, இணையும்போது அதன் தாக்கம் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்பது தான் பிரச்சனைக்கு காரணம்.
அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனமான NOAA-ன் கிளைமேட் ப்ரடிக்ஷன் சென்டர் வெளியிட்டுள்ள சமீபத்திய கணிப்பின் படி 2026 அக்டோபர் முதல் டிசம்பர் காலகட்டத்தில் இந்த எல்-நினோ மிகவும் வலுவான நிலையை ஏற்றுவதற்கான வாய்ப்பு 80 சதவீதம் இருப்பதாக சொல்கின்றது. இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் 1982, 1983, 1997, 1998, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் பதிவான சூப்பர் எல் நினோ-க்களை விட இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என சொல்கின்றனர்.
காலநிலை ஆய்வு நிறுவனமான பேர்க்லி எர்த் (Berkeley Earth) விஞ்ஞானி ஜெக் ஹாஸ்ஃபாதர் (Zeke Hausfather) தற்போதைய கணினி மாதிரி கணிப்புகள் மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும், சமீப காலத்தில் பதிவானவற்றில் மிகுந்த மிகவும் சக்தி வாய்ந்த எல் நினோவாக இது உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சில வானிலை ஆய்வாளர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக சக்தி வாய்ந்த எல் நினோவாக இது இருக்கலாம் என கூறுகின்றனர்.
இதை உறுதியாக நிரூபிக்க போதுமான நேரடி வானிலை பதிவுகள் இல்லை என்பதால் இந்த கருத்து ஒரு அறிவியல் ரீதியான கணிப்பாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடல் மற்றும் வளிமண்டலத்தை நேரடியாக அளவிடும் கருவிகள் மூலம் கிடைத்த ஆதாரங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பதே அதற்கு காரணம். முந்தைய காலநிலை மாற்றங்களை மர வளையங்கள், பனிப்பாறை மாதிரிகள் மூலம் மட்டுமே மதிப்பிடப்பட்டு வந்தன.
தற்போது சூப்பர் எல் நினோ உருவாகி இருந்தாலும் இதன் உண்மையான தாக்கம் அடுத்த ஆண்டில் தான் உலகம் முழுவதும் அதிகமாக உணரப்படும் என சொல்லும் விஞ்ஞானிகள், பொதுவாக ஒரு எல் நினோ உச்சநிலையை அடைந்த சில மாதங்களுக்குப் பிறகு உலகளாவிய வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகும் என்கின்றனர். இதனால் 2027 ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர்.
இந்த சூப்பர் அல்லது காட்ஸில்லா எல் நினோவின் தாக்கம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறாக இருக்கும். சில நாடுகளில் கடுமையான வறட்சி உருவாகலாம். வேறு சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். அமெரிக்காவின் சில மாநிலங்களில் கடும் புயல் மற்றும் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளில் வெப்ப அலைகளின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை வலுவான எல் நினோ உருவாகும் ஆண்டுகளில் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகும் சூழல் காணப்படுகிறது. மேலும், வெப்ப அலைகளின் எண்ணிக்கையும் தீவிரமாக இருக்கும். தென்மேற்கு பருவமழையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் இந்திய பெருங்கடல் டைபோல் போன்ற பிற காலநிலை காரணிகளும் மழை நிலவரத்தை தீர்மானிப்பதால் மழை கிடைக்குமா? இல்லையா? என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.
எல் நினோ காலநிலை மாற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே உலக வெப்பமயமாதால் பாதிக்கப்பட்டுள்ள பூமிக்கு தற்போது உருவாகி இருக்கும் எல்நினோ மேலும் பல சவால்களை உருவாக்கும் என எச்சரித்துள்ள ஐநா, அனைத்து நாடுகளும் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 2026 இல் உருவாகி வரும் இந்த காட்ஸில்லா எல் நினோ ஒரு சாதாரண கடலியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், 2027ஆம் ஆண்டின் உலக காலநிலை, வானிலை, வெப்பநிலை, மழைப்பொழிவு, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
