ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல்
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் பிளாக் செய்ய வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே இந்த பாதையில் செல்லும் கப்பல்களை ஈரான் குறி வைத்து தாக்கி வந்தது. இப்படி இருக்கையில் அமெரிக்காவும் இதை செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.

என்ன சொன்னார் டிரம்ப்?
இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், கப்பல்களை பிளாக் செய்வது தொடர்பாக பதிவிட்டிருக்கிறார். ஹார்முஸ் நீரிணை வழியாக உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் கப்பல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துமாறு தனது கடற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஈரானின் பிடிவாதம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
"அனைத்து கப்பல்களும் தடையின்றி உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், ஈரான் அதற்கு ஒத்துழைக்காததால், தற்போது இந்த நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
கப்பல்களுக்கு குறி
இந்த பாதை வழியாக பயணிக்கும் கப்பல்கள், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது. இதை டிரம்ப் ஏற்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக கட்டணம் செலுத்தி கப்பல்கள் பயணிப்பதாகவும், ஈரானுக்கு மறைமுகமாக சுங்க கட்டணம் செலுத்தும் கப்பல்களை குறி வைத்த மறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹார்முஸ் நீரிணை
ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து 20% இந்த பாதையில்தான் நடக்கிறது. இந்த பாதை மூடப்படும் எனில், அது எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்தும். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும். ஏற்கெனவே எல்பிஜி விஷயத்தில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், நீரிணையை மொத்தமாக அமெரிக்கா மூடினால் இந்தியா மிகப்பெரிய அளவில் பெட்ரோல், டீசல் பிரச்சனையை எதிர்கொள்ளும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை
ஏற்கெனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறியிருக்கிறது. தற்போது விலை ஓரளவுக்கு குறைவாக இருந்தாலும், நாளை காலை விடியும்போது நிச்சயம் விலை ஒரு பேரல் 115 டாலரை தாண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். இது எல்லாம் இந்தியாவின் தலையில்தான் வந்து விடியும்.
ஏற்கெனவே இந்தியாவில் நயரா மற்றும் ஷெல் தனியார் பங்குகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் விலையை உயர்த்தும். இந்த விலை உயர்வு சங்கிலி தொடர் போல மற்ற பொருட்களின் விலையையும் உயர்த்திவிடும்.












Click it and Unblock the Notifications