"சொர்க்கத்தில் திருமணம்.." ரொம்ப சீக்கிரம் நிஜமாக போகுது.. கட்டணத்தை கேட்டால் மயக்கமே வந்திடும் போல
வாஷிங்டன்: பொதுவாகத் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது என்பார்கள். ஆனால், இது வெறும் பழமொழி இல்லை மிக விரைவில் இது நிஜமாகவே நடக்க உள்ளது.
திருமணம் என்பது பலரது வாழ்க்கையிலும் ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஒன்று தான். இதன் காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்தைப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள்.
திருமணத்தில் எந்தவொரு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைத் தாண்டி அழகாகத் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்கும்.

திருமணம்: அதுபோல இப்போது Destination weddings எனப்படும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திருமணம் செய்யும் முறையும் பரவலாக அதிகரித்து வருகிறது. அழகிய மலைகளால் சூழப்பட்ட இயற்கையின் மடியில் உங்கள் வாழ்க்கைத் துணையைத் திருமணம் செய்து கொள்வது இப்போது ஒரு டிரெண்டாகிவிட்டது.
இவை இன்ஸ்டாகிராம் பதிவிடும் படங்களை மட்டும் நமக்குத் தருவதில்லை.. வழக்கமான பரபரப்பில் இருந்து விலகி சற்றே நிம்மதியையும் இது தருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களும் பல வகை பேக்கேஜ்களை கொடுத்து வருகின்றன. இதற்கிடையே ஒரு நிறுவனம் அனைவருக்கும் மேலே சென்று, சொர்க்கத்தில் திருமணம் செய்யும் வாய்ப்பை தருகிறது. சொர்க்கம் என்றவுடன் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ₹ 1 கோடி செலுத்தினால் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாமாம்.
எப்படி இருக்கும்: ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று இந்த நிறுவனம் தான் இதற்கான முயற்சியை எடுத்துள்ளது. பூமி நன்கு தெரியும்படி பெரிய ஜன்னலைக் கொண்ட கார்பன்-நியூட்ரல் பலூனில் தம்பதிகளைச் சுற்றுப்பாதையில் இந்த நிறுவனம் அனுப்புகிறது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் அடியில் திருமணம் செய்து கொள்ள முடியும். இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நெப்டியூன் விமானத்தில் ஆறு மணி நேரம் பயணிக்க வேண்டும்.
திருமணம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு லட்சம் அடியில் இருந்து நம்மைப் பத்திரமாகக் கீழே கொண்டு வந்துவிடும். இதற்கான கட்டணமாகத் தான் ஒரு கோடி ரூபாய் நியமிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தம்பதிக்கான கட்டணம் இல்லை. ஒரு நபருக்கான கட்டணம். மணமகன்- மணமகள் மட்டும் சென்று திருமணம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு கோடி தர வேண்டும். மற்றவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் கூடுதல் தொகையைத் தர வேண்டுமாம்.
ஸ்பேஸ் பலூன்: இந்த நிறுவனத்தின் ஸ்பேஸ்பலூன் நெப்டியூன் கேப்சூலை சுற்றுப்பாதையில் செலுத்துகிறது, ராக்கெட் பயன்பாடு இல்லாமல் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் மூலம் இது மேலே அனுப்பப்படுகிறது. இதில் கீழே இருந்து மேலே சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வரை அனைத்தையும் முழுமையாக ரசிக்க முடியுமாம். உள்ளே பார்ட்டி நடத்தலாம், பாட்னருடன் ஜாலியாக பேசலாம், கூலாக பாடல்களைக் கேட்கலாம். இது அத்தனைக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கழிப்பறை வசதியும் கேப்ஸ்யூலில் செய்து தரப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஜன்னலும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலே செல்லும் போதும் இறங்கும் போதும் பூமியின் அழகை நாம் 360 டிகிரி கோணத்தில் ரசிக்கலாம். மேலும், வைஃபை வசதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், பயணத்தை ஜாலியாக என்ஜாய் செய்யலாம்.
வெயிட்டிங் லிஸ்ட்: தங்கள் நெப்டியூன் காப்சியூல் புதுமணத் தம்பதிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தனை அதிக கட்டணம் இருப்பதால் யார் அங்குச் சென்று திருணம் செய்வார்கள் என்று நினைக்காதீர்கள். ஏற்கனவே சுமார் ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறார்களாம்.
அதில் யார் முதலில் ஒரு லட்சம் அடி மேலே சென்று திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. இது வழக்கமான ராக்கெட்களை போல பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்காது. இது ஒட்டுமொத்தமாகப் பூமியின் அழகை ரசிக்கும் வகையிலான ஒரே கேப்சூலை கொண்டிருக்கும்.
இந்த காப்ஸ்யூலில் அதிகபட்சமாக எட்டு பயணிகள் மற்றும் ஒரு பைலட் பயணிக்கலாம். மேலும், திருமணங்களுக்கு ஏற்ப தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவர்கள் தயாராகவே உள்ளனர். உணவு முதல் பாடல்கள் வரை அனைத்தையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications