ஜஸ் வாட்டரால் இத்தனை பிரச்சினையா.. பாடி பில்டருக்கு நேர்ந்த கொடூரம்! உயிரே போய் இருக்கும்
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடிபில்டர் ஒருவர் வெறும் குளிர்ந்த நீரைக் குடித்ததால் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கே ஆபத்தான சூழலில் அவர் தள்ளப்பட்டார்.
ஃபிராங்க்ளின் அரிபீனா என்ற அந்த நபர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மொத்தம் 20க்கும் மேற்பட்ட முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் ஒரு நாள் அவர் குளிர்ந்த நீரைக் குடித்த போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்துடன் தொடங்கி இருக்கிறது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது.
என்ன நடந்தது: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென என் மார்பில் ஏதோ ஒரு வித வலி ஏற்பட்டது. நான் இதற்கு முன்பு அதுபோன்ற ஒரு வலியை அனுபவித்ததே இல்லை" என்கிறார். வலி மட்டுமின்றி அரிபீனா உடனடியாக சுயநினைவை இழந்து மயங்கி உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முதலில் அவருக்கு என்ன பாதிப்பு.. எதனால் குளிர்ந்த நீரைக் குடித்ததால் அவருக்கு இப்படி நடந்தது எனத் தெரியவில்லை. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு மரபணு சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர். அதில் தான் அவருக்கு அஃபிப் எனப்படும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்ற பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
என்ன பாதிப்பு: அஃபிப் என்பது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் ஒரு நிலையைக் குறிக்கிறது. இந்த வகை பாதிப்பு இருப்போர் குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது அது தொண்டையின் பின்புறத்தில் அமைந்துள்ள வேகஸ் நரம்புடன் ரியாக்ட் செய்து அங்குள்ள நரம்பைத் தூண்டுகிறது. இதுவே அரிபீனாவிற்கு வலி ஏற்படக் காரணமாகும், இந்த வாகஸ் நரம்பு என்பது மூளையிலிருந்து மார்பு வரை நீண்டு இருக்கும் ஒரு நரம்பாகும். இதுதான் நமது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும்.
அரிபீனாவின் மருத்துவர் டாக்டர் கஷாயர் ஹேமட்பூர், இது ரொம்பவே அரிதான பாதிப்பு என்று கூறினார். இந்த பாதிப்பு உடையவர்களுக்குச் சோர்வு, மார்பு அசவுகரியம், மூச்சுத் திணறல் ஆகியவை அடிக்கடி ஏற்படுமாம். இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்துடன் இதயத்தில் தொடர்ச்சியாக வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
"விந்தணு" முதல் "ஆணுறை" வரை எல்லாமே பிரச்சினை தான்.! அலறும் இளம்பெண்.. இது என்ன வினோதமாக இருக்கே
ஆப்ரேஷன்: இப்போது பாடி பில்டரான அரிபீனா தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், "சிலர் வழக்கத்தை விட சற்று சோர்வாக இருப்பதாக உணரலாம், மூச்சுத் திணறல், மார்பு வலி என்று இதயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளைக் கவனிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அரிபீனாவுக்கு வாகஸ் நரம்பில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இந்த ஆப்ரேஷனுக்கு பிறகே அவர் முழுமையாகக் குணமடைந்தார், அவர் இப்போதும் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டி இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படவில்லையாம். இப்போது பாடி பில்டராக இருக்கும் அரிபீனா அனைவரும் தங்கள் உடலில் இந்த மாற்றம் ஏற்பட்டால் கவனித்து உடனடியாக சிகிச்சை பெறுமாறு வலியுறுத்துகிறார்.












Click it and Unblock the Notifications