"அடுத்த முறையும் அதிபர்.." அமெரிக்க சட்டத்தை மாற்றி எழுத போகும் டிரம்ப்? சொந்த கட்சியினருக்கே ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் தேர்வாகியிருக்கிறார். அந்நாட்டு விதிகளின்படி ஒருவரால் 2 முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. இந்தச் சூழலில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகலாம் என்று டிரம்ப் கூறியிருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது. இது அவரது சொந்த கட்சியினருக்கே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று டிரம்ப் அதிபராகத் தேர்வாகி இருக்கிறார். ஏற்கனவே 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்துள்ளார்.

டிரம்ப்: இதற்கிடையே இரண்டாவது முறையாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் டிரம்ப் அதிபராகப் பதவியேற்பார். அமெரிக்காவில் உள்ள சட்டப்படி ஒருவரால் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். ஒபாமவை போலத் தொடர்ந்து இரண்டு முறை அதிபரானாலும் சரி, இல்லை இப்போது டிரம்பை போல இடைவெளி விட்டு அதிபரானாலும் அங்கு அதிகபட்சமாக ஒருவரால் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதே விதியாகும்.
இந்தச் சூழலில் இந்த விதிக்கு எதிராக மூன்றாவது முறையாகத் தான் அதிபராகப் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் பேசியிருக்கிறார். இது டிரம்பின் சொந்த கட்சியினருக்கே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான குடியரசு கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "நான் மீண்டும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட மாட்டேன் என்றே நினைக்கிறேன். அதேநேரம் நீங்கள் அனைவரும் சேர்ந்து வலியுறுத்தினால் அந்த முடிவு மாறலாம்" என்பது போலக் கூறியிருந்தார்.
சொந்த கட்சியினருக்கே ஷாக்: இதைக் கேட்ட அங்கிருந்த குடியரசு கட்சியினரே ஷாக் ஆனார்கள். ஏனென்றால் அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் எந்தவொரு அதிபரும் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதைத் தடுக்கிறது. இந்த விதி மிக தெளிவாக இருப்பதால்.. இந்த சட்டம் இருக்கும் வரை அவரால் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றே அந்நாட்டின் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதென்ன 22வது சட்டத் திருத்தம்: 1932ம் ஆண்டு அதிபரான ஜனநாயக கட்சியின் ரூஸ்வெல்ட், அதன் பிறகு 1936, 1940 மற்றும் 1944 எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வென்று அதிபரானார். 1945இல் அவர் உயிரிழந்ததாலேயே அதிபர் பதவியில் மாற்றம் நடந்தது. இதுபோல ஒருவரே அதிபர் பதவியில் இருந்தால் அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதாலேயே 1951ம் ஆண்டு இந்த 22வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். இந்த விதி தான் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதைத் தடுக்கிறது.
என்ன செய்ய வேண்டும்: அதேநேரம் டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக விரும்பினால், அவர் முதலில் இந்த அந்த திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். 22வது திருதத்தை ரத்து செய்வது கடினமான வேலை என்றாலும் அது முடியவே முடியாதது எல்லாம் இல்லை. இதற்கான சட்டத் திருத்தத்தை டிரம்ப் முதலில் ஹவுஸ் மற்றும் செனட் சபை என இரண்டிலும் நிறைவேற்ற வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும். இப்போது டிரம்ப் கட்சிக்கு இரண்டு சபைகளிலும் பெரும்பான்மை இருக்கிறது என்ற போதிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லை என்பது முதல் பிரச்சினை..
அதை எப்படியோ சமாளித்து 3ல் 2 பங்கு ஆதரவுடன் நிறைவேற்றிவிட்டால் போதுமா என்றால் இல்லை.. அதன் பிறகு அந்த மசோதாவை மாகாண அரசுகளும் நிறைவேற்ற வேண்டும். நான்கில் 3 பங்கு மாகாணங்கள் அதை நிறைவேற்ற வேண்டும். அதாவது 38 மாகாணங்களில் நிறைவேற்ற வேண்டும். இதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்பதால் அது நடக்க வாய்ப்பே இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications