டிரம்ப் வரியால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் சிக்கல்.. ஐயோ லிஸ்டில் இத்தனை துறைகள் இருக்கா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே டிரம்பின் இந்த வரி இந்தியாவை எப்படிப் பாதிக்கும். இது இந்தியாவில் எந்தெந்த துறைகளைப் பாதிக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். மேலும், இதைச் சமாளிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான் அவர் கடந்த சில வாரங்களாகவே கூறி வரும் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் 10% முதல் 49% வரை வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் உலகளவில் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்பு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்தியா அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பு பல முக்கிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களின் வருவாயையும் பாதிக்கும்.
இடையில் ரத்தினக் கற்கள், நகைகள், மருந்துகள் மற்றும் வாகன பாகங்கள் உள்ளிட்ட 23 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தற்போது எந்தவொரு டீலும் இறுதியாகவில்லை.
தாக்கம் இருக்கும்
இது தொடர்பாக மார்க்கெட் அனாலிசிஸ்ட் அன்கூர் ஷர்மா கூறுகையில், "இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீதான டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும். இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தக உறவுகளில் குறுகிய கால மற்றும் நீண்ட கால தாக்கங்கள் என இரண்டுமே இருக்கும்" என்றார்.
இருப்பினும், டொனால்ட் டிரம்ப்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவைக் குறைவாகவே பாதிக்கும் என்று அசோசேம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் நாயர் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகையில், "அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். உலக வர்த்தகத்தில் ஒரு பெரிய மறுசீரமைப்பைக் கொண்டுவரும். இந்தியாவுக்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் 27% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு பெரியளவில் இருக்காது. இருப்பினும் கூட வரிகளின் தாக்கத்தைக் குறைக்க நாம் ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டும்" என்றார்.

எந்த துறை பாதிக்கும்
அன்கூர் சர்மா மேலும் கூறுகையில், "டிரம்பின் இந்த வரி அறிவிப்பால் இந்தியாவில் ஆட்டொமொபைல், மருத்துவத்துறை மற்றும் ஐடி ஆகியவை அதிகம் பாதிக்கப்படும்.. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல்கள் (கார், பைக் உள்ளிட்டவரை) மற்றும் வாகன உதிரிப் பாகங்களுக்கு ஏற்கனவே டிரம்ப் 25% வரியை அறிவித்துள்ள நிலையில், அதற்கு மேல் இந்த 27% ரெசிப்ரோக்கல் வரியும் வரும். இது ஏப்ரல் 2 முதல் வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கும், மே 3 முதல் உதிரிப் பாகங்களுக்கும் அமலுக்கு வருகிறது. டிரம்பின் இந்த வரியால் சில இந்திய கார் நிறுவனங்கள் நிச்சயம் பாதிக்கப்படும்" என்றார்
நாம் டாடா மோட்டர்ஸை எடுத்துக்கொள்வோம். டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எந்தவொரு ஏற்றுமதியையும் செய்வதில்லை. ஆனால், டாடாவின் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் (JLR) பிரிட்டனில் இருந்து கார்களை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இதனால் டாடா மோட்டர்ஸ் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும். இதன் காரணமாகவே பங்குச்சந்தையில் டாடா மோட்டர்ஸ் பங்கு விலை கணிசமாகச் சரிந்துள்ளது. உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்யும் மேலும் சில நிறுவனங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
மருத்துவத் துறை
அன்கூர் சர்மா மேலும் கூறுகையில், "மருத்துவ துறையில் அதிக பாதிப்பு ஏற்படலாம்.. எந்த துறைக்கு எத்தனை சதவிகித வரி என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்திய மருத்துவ நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக இருக்கிறது. டிரம்பின் வரி விதிப்பு இந்திய மருத்துவ நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும்" என்றார். மருத்துவ இறக்குமதிக்கு டிரம்ப் நிர்வாகம் விலக்கு அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி விலக்கு அளித்தால் அதுவும் இந்திய நிறுவனங்களுக்கு நல்ல செய்தி தான்.
ஐடி துறை
அதேபோல வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்படும் மற்றொரு துறை ஐடி ஆகும். சர்வீஸ் பிரிவில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. ஐடி துறையில் அமெரிக்கா தான் இந்தியாவின் மிக முக்கிய சந்தையாக இருக்கிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் மீது இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அன்கூர் சர்மா எச்சரிக்கிறார். எத்தனை காலம் இந்த வரி அமலில் இருக்கும்.. இந்திய நிறுவனங்கள் எந்தளவுக்கு இதைச் சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே பாதிப்புகள் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் இந்த ரெசிப்ரோக்கல் வரி இந்தியப் பொருளாதாரத்தில் பல வகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். முக்கிய ஏற்றுமதித் துறைகள் மற்றும் அது சார்ந்த தொழில்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். வரிகள் எவ்வளவு காலம் அமலில் இருக்கப் போகிறது.. அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பாதிப்புகள் இருக்கும்" என்றார்.

வேறு என்ன பாதிப்பு
இந்த துறைகள் மட்டுமின்றி ஸ்டீல் மற்றும் விவசாயம் போன்ற துறைகளும் பாதிக்கப்படும் என்று ஸ்டாக்ஸ்கார்ட்டின் இயக்குநர் பிரனய் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளாக உள்ள மருத்துவத் துறை மற்றும் ஐடி துறை சார்ந்த பங்குகள் ஏற்கனவே பங்குச்சந்தையில் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. வரி அமலுக்கு வந்தால் அது பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வரி அறிவிப்பு இந்திய ரூபாயின் மதிப்பைப் பலவீனப்படுத்தி, அந்நிய நேரடி முதலீட்டைத் தடுக்கக்கூடும். அமெரிக்க டாலர் மதிப்பும் அமெரிக்காவின் அரசு பத்திரங்களும் வலுவாகும்" என்றார்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்
இப்படி இந்தியா பல்வேறு வழிகளில் பாதிக்கப்படலாம் என்பதால் வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்பது ரொம்பவே முக்கியம். இந்தியா அமெரிக்கா உடன் ஒரு வர்த்தக டீலை போட்டு, வரி விதிப்பை நிறுத்த வேண்டும். அப்போது தான் இந்திய நிறுவனங்கள் காப்பாற்றப்படும் என்கிறார்கள் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications