நீங்க நடக்கும் ஸ்டைலை வைத்தே.. எப்போது மரணம் என்பதை கண்டுபிடிக்கலாம்.! அசர வைக்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: ஒருவர் நடக்கும் முறையை வைத்து அவர் எப்போது உயிரிழப்பார் என்பதைக் கணிக்கும் முறையைப் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் நம்மை ஒரு வழியாக்கிவிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் பல லட்சம் மக்களை இழந்து உள்ளோம்.
இப்போது தான் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மெல்ல மீண்டு வருகிறோம். கொரோனாவுக்கு பின் ஆரோக்கியம் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்கிங் ஸ்டைல்
இதனிடையே பிரிட்டன் ஆய்வாளர்கள் ஒருவர் நடக்கும் போது, அவர்களின் கைகள் எப்படி நகர்கிறது என்பதை வைத்து எப்போது மரணம் ஏற்படலாம் என்பது குறித்துக் கண்டறிந்து உள்ளனர். அதாவது கைகளில் கட்டி இருக்கும் ஸ்மார்ட் வாட்சுகளின் தரவுகளைக் கொண்டு அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்றும் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதா என்பதையும் இதன் மூலம் கண்டறிய முடியும் என்று கூறி உள்ளனர்.

6 நிமிடங்கள்
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் PLOS ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2006 முதல் பிரிட்டனில் உள்ள ஒரு லட்சம் பேரின் வாக்கிங் தரவுகளை இவர்கள் ஆய்வு செய்து உள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் பதிவான தரவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் ஆறு நிமிடங்களில் எத்தனை தூரம் நடந்து உள்ளனர். அப்போது அவர்கள் உடல் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்து உள்ளனர்.

கணிப்பு
அப்போது உடலின் செயல்திறனில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக ஆய்வு செய்து உள்ளனர். இந்த ஆறு நிமிட வேகம், பயணித்த தூரம் ஆகியவற்றை கண்காணித்து உள்ளனர். இதன் மூலம் அவர்களது உடல்நிலை மற்றும் எப்போது அவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். முதல் ஆண்டில் (2017) ஆய்வாளர்கள் கணித்தபடி 72 சதவீதம் மரணங்கள் துல்லியமாக இருந்து உள்ளன.

துல்லியம்
இது அப்படியே தொடர்ந்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவர்கள் கணித்ததை போலவே 73 சதவீதம் மரணங்கள் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிலும் கூட ஒருவர் நடக்கும் முறையை வைத்தே அவர் உடல்நிலை குறித்த தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் உயிரிழக்க வாய்ப்பு உள்ள காலத்தையும் கூட கூற முடியும் என்று கூறி இருந்தார்.

கண்டறியலாம்
இப்போது புதிய ஆய்வு இன்னும் துல்லியமாக அதைக் கண்டறிய உதவுகிறது. இது தொடர்பாக ஆய்வாளர் ஷாட்ஸ் கூறுகையில், "நீங்கள் எல்லா டேட்டாக்களையும் பதிவுசெய்தால் போதும். அவரது நடையை வைத்தே அவருக்கு என்ன மாதிரியான குணங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்துவிடலாம். அந்த நபரின் ஆரோக்கியம் குறித்தும் கூட பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications