இடதுசாரிகள், வலதுசாரிகள் என இருவரையும் இணைத்த ஹெச் 1பி விசா.. அப்போ இந்தியர்களின் நிலை திண்டாட்டமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர்கள் வேலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஹெச் 1பி விசா தான் பெரியளவில் உதவுகிறது. ஆனால், இப்போது ஹெச் 1பி விசா திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் குரல்கள் எழுந்துள்ளன. அதிலும் அங்கு எதிரும் புதிருமாக இருக்கும் இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என இரு தரப்புமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்குள்ள இந்தியர்களை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காகச் செல்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஐடி துறைகளிலேயே வேலை செய்கிறார்கள்.

இந்தியர்கள் ஹெச் 1 பி விசா:
இதுபோல அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் செல்ல ஹெச் 1-பி விசா திட்டம் உதவுகிறது. இதில் அதிகளவில் பயன் பெறுவது என்னவோ இந்தியர்கள். அங்கு கிட்டதட்ட 5ல் ஒரு பங்கு விசா இந்திய நிறுவனங்களே வழங்கியுள்ளன. அந்தளவுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் சூழலில், திடீரென இப்போது அந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன.
ஹெச் 1-பி விசா முடக்க வேண்டும் என்று டிரம்பின் குடியரசு கட்சியில் உள்ள தீவிர வலதுசாரிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். டிரம்ப் இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கும் நிலையில், இந்த குரல்கள் அதிகரித்துள்ளன.
வலதுசாரிகள் விமர்சனம்:
தீவிர வலதுசாரியான லாரா லூமர் மற்றும் ட்ரம்பின் மாஜி வெள்ளை மாளிகையின் அதிகாரி ஸ்டீவ் பானன் ஆகியோர் இதை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த விசா திட்டத்தால் அமெரிக்கர்களுக்குச் சிக்கல் ஏற்படுவதாக விமர்சித்துள்ளனர். அதாவது திறமை வாய்ந்த அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதைத் தடுக்க ஹெச் 1பி விசா திட்டத்தைப் பெருநிறுவனங்கள் பயன்படுத்துவதாக வலதுசாரிகள் விமர்சிக்கிறார்கள். அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையைக் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினருக்கு வழங்குவதாக அவர்கள் சாடுகிறார்கள்.
எலான் மஸ்க்:
அதேநேரம் அனைத்து குடியரசு கட்சியினரும் இதே நிலைப்பாட்டில் உள்ளனர் எனச் சொல்ல முடியாது. அதே கட்சியில் இருக்கும் எலான் மஸ்க் ஹெச் 1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க், கடந்த தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்திருந்தார். அவர் ஹெச் 1 பி விசா திட்டத்தால் அமெரிக்கா மிகப் பெரியளவில் பலன் அடைவதாகக் கூறுகிறார். அமெரிக்காவைப் பலப்படுத்தத் தன்னை போலப் பல நூறு தொழிலதிபர்களுக்கு இந்தத் திட்டம் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகெங்கும் இருந்து திறமையாள ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர இது உதவுவதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டார். இதை எதிர்ப்போரை அவர் கெட்ட வார்த்தையிலும் கூட சமூக வலைத்தளங்களில் திட்டினார். இந்தச் சூழலில் தான் எலான் மஸ்கின் இந்த ஹெச் 1 பி விசா திட்ட ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த முறை வலதுசாரிகளிடம் இருந்து இல்லை இடதுசாரி சிந்தாத்தம் கொண்ட பெர்னி சாண்டர்ஸிடம் இருந்து வந்துள்ளது.
இடதுசாரிகளும் விமர்சனம்:
பெர்னி சாண்டர்ஸ் தன்னை ஒரு ஜனநாயக சோசலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக் கொள்பவர். அவரும் இப்போது ஹெச் 1 பி விசா திட்டத்தை எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எலான் மஸ்க் சொல்வது தவறு.. ஹெச் 1 பி விசா திட்டத்தின் முக்கிய நோக்கம் திறமையான நபர்களை வேலைக்கு எடுப்பது இல்லை.. மாறாக அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையைக் குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டினருக்குத் தருவதே இதன் நோக்கம். குறைந்த ஊதியத்தில் அவர்களை வேலைக்கு எடுத்துவிட்டு, இவர்கள் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள்" என்று சாடினார்.
மேலும், டெஸ்லா நிறுவனத்தில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுத்துவிட்டு சுமார் 7,500க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதுவும் இவை அனைத்துமே இணை கணக்காளர், பொறியாளர்களாகவும் உட்படக் குறைந்த ஊதியம் பெறும் வேலை என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தருவதைத் தவிர்க்கவே பெருநிறுவனங்கள் ஹெச் 1 விசா திட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பது இவரைப் போன்ற இடதுசாரிகளின் வாதமாக இருக்கிறது.
இந்தியர்களுக்குச் சிக்கலா:
இப்படி இடதுசாரிகள் வலதுசாரிகள் என இரு தரப்புமே ஹெச்1 பி விசா திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஹெச்1 பி விசாவால் இந்தியர்கள் அதிகம் பயன் பெறும் நிலையில், திடீரென இப்படி எதிர்ப்பு எழுந்துள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஹெச்1 பி திட்டத்தை உடனடியாக நிறுத்துவது கிட்டதட்டம முடியாது. மேலும், தற்போது வரை டிரம்பும் கூட ஹெச் 1பி விசா திட்டத்திற்கு ஆதரவாகவே இருப்பதால் எந்தவொரு சிக்கலும் வராது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications