அட.. உண்மைதாங்க! காற்றில் இருந்து மின்சாரம்.. அதுவும் இவ்வளவு சிம்பிளா! வியந்து நின்ற ஆய்வாளர்கள்
மின்சார தேவை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காற்றை மின்சாரமாக மாற்றும் ஒரு என்சைமை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது க்ளீன் எனர்ஜி உற்பத்தியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரம் எந்தளுவுக்கு முக்கியம் என்பதை நாம் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. மின்சாரம் இப்போதும் வளரும் நாடுகளில் பெரும்பாலும் நிலக்கரியில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் அதிகப்படியான காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், புவி வெப்ப மயமாதலுக்கும் காரணமாக அமைகிறது. இதனால் மாசுகளைத் தவிர்த்து க்ளீன் எனர்ஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.

காற்றில் இருந்து மின்சாரம்
இருப்பினும், க்ளீன் எனர்ஜி உற்பத்திக்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் தயக்கம் காட்டியே வருகின்றனர். அதேபோல வாகனங்கள் தொடங்கி அனைத்தும் மின்சார வாகனங்களாக மாறி வரும் நிலையில், மின்சாரத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் மின் தேவை அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் ஆய்வாளர்கள் புதுவித கண்டுபிடிப்பை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது எனர்ஜி துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

எப்படி
இதனிடையே இப்போது ஆய்வாளர்கள் காற்றை மின்சாரமாக மாற்றும் ஒரு என்சைமை கண்டுபிடித்துள்ளனர்... இது வரம்பற்ற க்ளீன் எனர்ஜிக்கான மூலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு இதைக் கண்டறிந்துள்ளது. மண்ணில் காணப்படும் பாக்டீரியாவில் உள்ள ஹைட்ரஜனை உட்கொள்ளும் என்சைம் ஒன்று, வளிமண்டலத்தில் இருந்து மின்சாரத்தை உருவாக்குவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள்
இது தொடர்பாகப் பேராசிரியர் கிறிஸ் கிரீனிங் கூறுகையில், "சில நேரங்களில் பாக்டீரியாக்கள் வளரவும் உயிர்வாழவும் காற்றில் உள்ள ஹைட்ரஜனை மூலமாகப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம். அண்டார்டிக் மண், எரிமலைப் பள்ளங்கள் மற்றும் கடலில் உள்ள ஆழமான பகுதிகளில் என்று அனைத்து பகுதிகளிலும் இந்த வகை பாக்டீரியாக்கள் கண்டறியப்படுகிறது. இருப்பினும், இப்போது வரை இதை அந்த பாக்டீரியாக்கள் எப்படிச் செய்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்துத் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்" என்றார்.

Huc என்சைம்
இது குறித்த தகவல்கள் நேச்சர் ஆய்விதழில் 'வளிமண்டல ஹைட்ரஜனில் இருந்து பாக்டீரியா ஆற்றலைப் பிரித்தெடுப்பதற்கான கட்டமைப்பு அடிப்படை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த என்சைமை Huc என்று அழைக்கிறார்கள். இது நிலையாக இருப்பதாகவும் மெல்லிய காற்றிலிருந்து ஆற்றலை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் திறமையாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த என்சைமின் செயல்திறனும் மிகச் சிறப்பாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரொம்ப குறைவு
மேலும் ஆய்வாளர்கள், "இது மற்ற என்சைம், ரசாயனங்களை போலல்லாமல், இது குறைவான ஹைட்ரஜனையே பயன்படுத்துகிறது.. நாம் சுவாசிக்கும் காற்றில் 0.00005 சதவிகிதம் மட்டுமே இருந்தாலும் கூட ஆற்றலை உற்பத்தி செய்கிறது" என்றனர். சுத்திகரிக்கப்பட்ட இந்த Huc என்சைமை நீண்ட காலத்திற்குக் குறைவான வெப்பத்திலும் அல்லது உயர்ந்த 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் மின்சாரம் தயாரிக்கும் சக்தியை இழக்காமல் சேமிக்க முடியும் என்பதும் சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இது சூரிய மின்சாரத்திற்கு இணையாகவே இருக்கும்.

அடுத்தகட்ட திட்டம்
ஹக்கின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே உடனடி நோக்கம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமுறை நாம் போதுமான அளவு Hucஐ உற்பத்தி செய்துவிட்டால், க்ளீன் எனர்ஜி உற்பத்தியில் புதுப்புது இலக்குகளை அடைய முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த என்சைம் வரும் காலங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications