‘லேண்டிங்' எங்க பண்ணணும்னு தெரியல.. தனியாக முதல்முறை விமானம் ஓட்டி நடுவானில் கதறிய பைலட்! என்னாச்சி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 4 ஆயிரம் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வானில் பறந்த விமானங்கள் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டன. இந்த சமயத்தில் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரி ஒருவர் தரையிறங்க சொன்னபோது பைலட் ஒருவர், ''இன்று தான் முதல் முறையாக தனியாக விமானம் ஓட்டுகிறேன். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை'' என கூறியதும், அதன்பிறகு என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி மாலை 3.54 மணிக்கு திடீரென்று அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. அந்த நாட்டின் 22 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செல்லும் தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தான் விமானங்கள் நிறுத்தப்பட்டன.
சுமார் 4 மணிநேரம் 22 நிமிடங்கள் வரை போராடிய பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. இருப்பினும் 4 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 10 ஆயிரம் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் விமானத்தை அவசரமாக தரையிறங்க சென்னபோது கட்டுப்பாட்டு மைய அதிகாரிக்கும், பைலட்டுக்கும் இடையே நடந்து உரையாடல் தொடர்பான ஆடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசிய விமானி அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த பைலட் பயிற்சி மாணவர் (ஸ்டூடண்ட் பைலட்) ஒருவர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த பைலட் பயிற்சி மாணவர் டெக்சாஸில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து தனியாக பயிற்சி விமானத்தில் பறந்தார். அப்போது தான் விமானங்கள் அவசரஅவசரமாக தரையிறங்கும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அப்போது டெக்சாஸ் டாரண்ட் கவுண்டியில் உள்ள அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் மீச்சம் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த அதிகாரி பைலட் பயிற்சி மாணவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ''நாடு முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் விமானத்தையும் தரையிறக்க வேண்டும். நீங்கள் எந்த இடத்தில் தரையிறங்க விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த பயிற்சி பைலட், ''நான் ஸ்டூடண்ட் பைலட். உண்மையை சொல்ல வேண்டுமானால் இதுதான் தனியாக நான் ஓட்டும் முதல் விமானம். இதனால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை'' என்று கூறினார். இதை கேட்ட அதிகாரி அந்த விமானம் ஹிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதை அறிந்து கொண்டார். இதனால் அவர், ''புறப்பட்ட ஹிக்ஸ் விமான நிலையத்திலேயே தரையிறங்குங்கள். ஆனால் இப்போது அங்கு 2 ஹெலிகாப்டர்கள் உட்பட பல விமானங்கள் உள்ளன'' என்று அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அந்த பயிற்சி பைலட், 'ஹிக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதை உறுதி செய்ய அனுமதி கோரினார். அதற்கு அந்த அதிகாரி, ''விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான அனுமதியை என்னால் வழங்க முடியாது'' எனக்கூறினார். அதுமட்டுமின்றி விமானத்தில் இருந்து Advisory Frequency-க்கு மாற்றி தரையிறங்குவதற்கான கட்டுப்பாட்டு அதிகாரியுடன் தொடர்பு கொள்ளும்படி கூறினார்.
இதனால் பயந்துபோன பயிற்சி பைலட், ''ஹிக்ஸ் விமான நிலையத்தில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா? இல்லை நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்படுவதால் இப்படி சொல்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, ''ஹிக்ஸ் விமான நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை'' என்று கூறினார்.
அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் அந்த விமானம் ஹிக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனை FlightAware எனும் விமான பயணக் கண்காணிப்பு இணையதளம் உறுதி செய்துள்ளதாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த ஸ்டூடன்ட் பைலட் மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரி இடையே நடந்த உரையாடல் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
