ஹெச்.1 பி விசா: அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்கள்.. 2024 டேட்டாவை பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். ஹெச்1 பி விசா நடைமுறையில் டிரம்ப் மாற்றம் கொண்டு வரலாம் என பேசப்படுகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர். இது ஒருபக்கம் இருக்க ஹெச்.1 பி விசாக்களை பெறுவதில் 5-ல் ஒரு பங்கு என்ற அளவில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது கடந்த ஆண்டு தரவுகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வென்றுள்ள டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த போவதாகத் தொடர்ந்து பேசி வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் இதுபற்றியே அதிகம் பேசியிருந்தார் டொனால்டு டிரம்ப். சட்டப்பூர்வ குடியேற்ற முறைகளான ஹெச் 1 பி விசா திட்டங்களில் கூட மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று டிரம்பின் குடியரசுக் கட்சியில் இருந்தே கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எலான் மஸ்க் ஹெச்.1 பி விசாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். டிரம்பும் வெற்றிக்கு பிறகு பேசுகையில், ஹெச்.1 பி விசாக்களை விரும்புவதாக பேசியிருக்கிறார். ஹெச் 1 பி விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுவது வெளிப்படையாக தெரிந்த விஷயம் என்றாலும் கூட, கடந்த ஆண்டில் ஹெச்.1 பி விசா பெறுவதில் இந்திய நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது தற்போது வெளியாகியுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க குடியேற்ற துறை தரவுகளில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:- கடந்த ஏப்ரல் - செப்டம்பர் கால கட்டத்தில் மொத்தம் 1.3 லட்சம் ஹெச். 1 பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 24,766 விசாக்கள் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனம், 8,140 பயனாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
டிசிஎஸ் 5,274 பேருடன் இரண்டாவது இடத்திலும், ஹெச்.சி.எல் அமெய்ர்க்கா 2,953 விசாக்கள் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக அமேசான் நிறுவனம் தான் 9,265 விசாக்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நிறுவப்பட்டு தற்போது நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம் 6,327 விசாக்கள் பெற்று 3 வது இடத்தில் உள்ளது.
ஹெச்.1 பி. விசா என்றால் என்ன?
ஹெச்.1 பி விசா என்பது, அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கும் விசாவாகும். இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சிறப்புப் பணிகளுக்குத் திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்களை நிரப்ப முடியும்.
இந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். ஹெச் 1 பி விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும். நிறுவனங்களே நேரடியாக இந்த விசாக்களை பெற்று ஊழியர்களுக்கு அளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications