ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்துவிட்டார்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிக பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் முக்கிய பகுதிகளில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல் நடந்து வரும் சூழலில், கமேனி உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வரலாற்றில் மிகக் கொடூரமானவர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் என்றும் ஈரான் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் நீதி கிடைத்துவிட்டது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானைச் சுற்றிக் கடந்த சில காலமாகவே அமெரிக்கா தொடர்ந்து தனது படைகளைக் குவித்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீது ஈரான் தாக்குதலை நடத்தும் என்றே சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் வீக் எண்ட்டில் நேற்றைய தினம் திடீரென தாக்குதல் தொடங்கப்பட்டது.

பதற்றம்
ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்து வருகிறது. ஈரானும் கூட பதிலடி தாக்குதல்களை நடத்தி வருவதால் அங்கு மிகவும் தீவிரமான மற்றும் பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் தங்கள் வான்வெளியில் மூடியுள்ளன.
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரலாற்றில் மிகக் கொடூரமானவர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் என்ற டிரம்ப், ஈரான் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் நீதி கிடைத்துவிட்டது என்றும் டிரம்ப் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து தப்ப முடியவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் அறிவிப்பு
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், "வரலாற்றில் மிகக் கொடூரமானவர்களில் ஒருவர் கமேனி இறந்துவிட்டார். இதன் மூலம் ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அமெரிக்கர்களுக்கும், கமேனியால் கொல்லப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட அனைத்து உலக மக்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. இந்த தருணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது.
ஈரான் புரட்சிகரப் படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் சில பிரிவினர் பாதுகாப்பு கோருகின்றன. இப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும், பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும். அதேநேரம் கமேனி கொல்லப்பட்டாலும் கூட ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும். மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி அடையத் தேவையான காலம் வரை தீவிரமான மற்றும் துல்லியமான தாக்குதல்கள் தொடரும்" என்றார்.
உறுதி செய்த ஈரான்
ஈரான் தரப்பில் கமேனியின் மரணம் குறித்து முதலில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு கமேனி உயிரிழப்பை ஈரான் உறுதி செய்தது. இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 1989 முதல் ஈரானை ஆட்சி செய்த தலைவரைக் குறிவைத்தே அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தாக்குதலை நடத்தியது.
பெரிய அடி
மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. செயற்கைக்கோள் படங்கள் தலைமை அலுவலகத்தின் தெஹ்ரான் வளாகத்திற்குக் குறிப்பிடத்தக்கச் சேதத்தைச் சுட்டிக்காட்டின. இது குண்டுவீச்சுத் தாக்குதலின் தீவிரத்தைக் காட்டுகிறது. கமேனியின் மரணம், 1989 முதல் அவர் தலைமையேற்று நடத்திவந்த இஸ்லாமிய குடியரசிற்கு ஒரு மாபெரும் அடியாக அமையும்.












Click it and Unblock the Notifications