"இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.." எலான் மஸ்க்கிற்கு நேரடியாக மிரட்டல்! அமெரிக்க துணை அதிபர் பரபர பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பை எலான் மஸ்க் விமர்சனம் செய்வது மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், எலான் மஸ்க் ஒரு எமோஷ்னலான நபர் என்றும், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து பேசி வருவதாகவும் சாடியுள்ளார். துணை அதிபரே நேரடியாக எலான் மஸ்க்கை எச்சரித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு வரை நல்ல நண்பர்களாக இருந்த அதிபர் டிரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது இரு தரப்பிற்கும் இடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

துணை அதிபர் வான்ஸ்
ட்ரம்பிற்கும் எலான் மஸ்கிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவை பற்றிப் பேசிய துணை அதிபர் வான்ஸ், "எலான் மஸ்க் சற்று அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். எலான் மஸ்க் அதிபர் ட்ரம்பை அவர் விமர்சிப்பது ஒரு பெரிய தவறு. இது நாட்டிற்கு நல்லதல்ல, எலான் மஸ்கிற்கும் இது நல்லதாக இருக்காது. எலான் மஸ்க் இறுதியில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்றே நம்பினேன். ஆனால், இப்போது அதற்கு சாத்தியம் இல்லை என நினைக்கிறேன்" என்றார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் என எலான் மஸ்க் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவை அனைத்திற்கும் அமெரிக்கா தான் முக்கியமான மார்க்கெட்டாக இருக்கிறது. இந்தச் சூழலில் டிரம்பை விமர்சிப்பது எலான் மஸ்கிற்கு நல்லதாக இருக்காது எனத் துணை அதிபர் வான்ஸ் கூறியிருப்பது கிட்டதட்ட மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது.
பின்னணி
அதிபர் ட்ரம்பின் புதிய வரிச் சலுகை மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் டிரம்பிற்கும் இடையேயான தொடர்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கிறது என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப், எலான் மஸ்கிக் நாசா ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் மிரட்டினார். இப்படி உலக வல்லரசின் அதிபருக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்கும் இடையே வெடித்துள்ள மோதல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எப்ஸ்டீன் பைல்ஸ்
இது தொடர்பாக ஜே.டி. வான்ஸ் மேலும் கூறுகையில், "எல்லோரும் ஒரு சமயம் இதுபோல ஆத்திரப்பட்டு பேசியிருப்போ்ம. எலான் மஸ்க் செய்ததை விட நான் மோசமாக சில சமயம் நடந்து கொண்டிருக்கிறேன்" என்றார். எப்ஸ்டீன் பைல்ஸில் டிரம்ப் பெயர் இருப்பதாலேயே அந்த ஆவணங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த வான்ஸ், "நிச்சயமாக இல்லை. டொனால்ட் ட்ரம்ப் எந்த தவறும் செய்யவில்லை" என்றார்.
ட்ரம்பை பதவி நீக்கம் செய்துவிட்டு, வான்ஸை அதிபராக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த வான்ஸ், "இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் உதவியாக இருக்காது. இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமான ஐடியா. அதிபர் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்" என்றார். அதேநேரம் எலான் மஸ்க்கை வான்ஸ் முழுமையாக விமர்சிக்கவில்லை. எலான் மஸ்கின் சாதனைகளைப் பாராட்டிய வான்ஸ், அவரை மிகச் சிறந்த ஒரு பிஸ்னஸ்மேன் எனக் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைக்க எலான் மஸ்க் டாஜ் துறையில் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
காரணம் இதுதான்
டிரம்பின் தி பிக் பியூட்டிபுல் பில் என்ற மசோதாவை விமர்சிக்கத் தொடங்கிய போதுதான் எலான் மஸ்க்- டிரம்ப் இடையே மோதல் வெடித்தது. அந்த மசோதா குறித்துப் பேசிய வான்ஸ், "இந்த மசோதாவின் நோக்கம் செலவுகளைக் குறைப்பது மட்டுமல்ல.. ட்ரம்ப் 2017-ல் அறிவித்த வரி குறைப்புகளை நீட்டிப்பதும்தான். இது ஒரு நல்ல மசோதா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது பிழைகளே இல்லாத மசோதா என்றும் நான் சொல்லவில்லை" என்றார்.
டிரம்பின் இந்த தி பிக் பியூட்டிபுல் மசோதாவை எலான் மஸ்க் மட்டுமின்றி பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த மசோதா பெடரல் அரசின் கடனை 2.4 டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குக் காப்பீடு இல்லாத நிலையை உருவாக்கும் என எச்சரித்தனர். எலான் மஸ்க் இதை அருவருப்பான ஒன்று என அழைத்திருந்தார். அதுவே அதிபர் டிரம்பை ஆத்திரப்படுத்தியது.












Click it and Unblock the Notifications