எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவனுக்கு பணி.. யார் இந்த கைரான் குவாசி?
வாஷிங்டன்: எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்ற 14 வயது சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் யார் என்பதை பார்க்கலாம்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் , ஸ்டார் லிங்க் உள்ளிட்டவைகளின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் எலான் மஸ்க். உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி அதில் சில மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் வேலை வழங்கியுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்தவர் கைரான் குவாசி. இவருக்கு 14 வயதாகிறது.
தனது 11 ஆவது வயதில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிக்கத் தொடங்கினார். தற்போது சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெறவுள்ளார். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற குவாசிக்கு அந்த நிறுவனம் முக்கிய பணியை வழங்கவுள்ளது.

எலான் மஸ்க் நிறுவனங்களில் எதில் சேரவேண்டுமானாலும் கடுமையான நேர்காணல்கள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் 14 வயது சிறுவன் குவாசி எலான் மஸ்கின் மனதை தொட்டு சாப்ட்வேர் என்ஜினியர் பணியை பெற்றுள்ளார்.
இதுகுறித்து கைரான் குவாசி தனது சமூகவலைதள பக்கமான லிங்கிடு இன்னில் கூறியிருப்பதாவது: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சேரவும் ஸ்டார்லிங்க் குழுவில் பணியாற்றவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் என்னுடைய வயதை கூட பொருட்படுத்தாமல் திறமையை பார்த்து பணியில் சேர்த்துள்ளார் எலான் மஸ்க்.
இது எனக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற கையோடு தனது தாயுடன் வாஷிங்டனுக்கு சென்று பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகையில் குவாசி எங்கள் நிறுவனத்தில் விண்வெளியை ஆராய்வதற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் மனித குலத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற அவர் பங்களிப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.
10 வயதில் கைரான் இன்டெல் லேப்ஸ் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி இணைந்து செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்துள்ளார். கைரான் குவாசிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இவர் அமெரிக்க வாழ் வங்கதேசி ஆவார்.












Click it and Unblock the Notifications